மோடிக்கு சுந்தர் பிச்சை கொடுத்த 2 ப்ராமிஸ்.. குஜராத்துக்கு வர்றோம். பல கோடிகளை அள்ளி தர்றோம்.. எதற்காக?
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi), கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Google CEO) ஆன சுந்தர் பிச்சை (Sundar Pichai) சந்தித்து பேசினார். முன்னதாக எலான் மஸ்க்கும் (Elon Musk) கூட மோடியை சந்தித்து பேசியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்கு பின்னர் குஜராத் மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த சுந்தர் பிச்சை "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் (India's Digitisation fund) 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்யும் விஷயத்தை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம்."
"குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் (GIFT City) எங்களின் உலகளாவிய ஃபைன்டெக் செயல்பாட்டு மையத்தை (Global fintech operation centre) திறக்க உள்ளத்தையும் அறிவித்துளோம்" என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அறியாதோர்களுக்கு குஜராத்தில் உள்ள காந்திநகர் தான் கிஃப்ட் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கிஃப்ட் என்றால் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (Gujarat International Finance Tec-City) என்று அர்த்தம்.
மேலும் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவில் (Artificial intelligence) பணிபுரியும் நிறுவனங்கள் உட்பட, நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, 100 மொழி முயற்சியை (100-language initiative) நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மிக விரைவில் பல இந்திய மொழிகளையும் அதில் கொண்டு வருவோம்." என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியாவுக்கான (Digital India), பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார். மேலும் டிஜிட்டல் பிரச்சாரம் என்பது மற்ற நாடுகள் பின்பற்ற விரும்பும் ஒன்றாகும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் மோடியின் சந்திப்பின் போது, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜெரோதா & ட்ரூ பீக்கன் இணை நிறுவனர் நிகில் காமத், ஓப்பன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications