iQOO-வின் புது கில்லி.. ரூ.20000 க்கு கீழே புது 5ஜி போன் வாங்க போறவங்க ஜூலை 24 வரை பொறுங்க.. ஏன்னா?
ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் தற்போதைய விலை உயர்வு சூழ்நிலையை கருத்தில் கொண்டால், என்னை பொறுத்தவரை, ரூ.20000 க்கும் குறைவான விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவது என்பது - இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்கிற மொமெண்ட் ஆகும்.
அதுவும் அறிமுகத்திற்கு முன்பாகவே இது ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ள ஐக்யூவின் வியாபார தந்திரத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் - இப்படி வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம், ரூ.20000-ஐ பட்ஜெட்டை சுற்றி வேறு பிராண்டின் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களை, வாங்க நினைப்பவர்களை ஜூலை 24 ஆம் தேதி வரை தடுத்து நிறுத்த முடியும்.

அப்படி என்ன ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது? ஐக்யூ நிறுவனம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி அன்று ஐக்யூ இஸட்11 லைட் 5இ (iQOO Z11 Lite 5G) மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தனது இஸட்11 சீரிஸை விரிவுபடுத்த உள்ளது. கடந்த சில நாட்களாக அமேசான் (Amazon) தளத்திலுள்ள ஒரு பிரத்யேக பக்கம் (microsite) வாயிலாக, ஐக்யூ நிறுவனம் அதன் இஸட்11 லைட் 5ஜி குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் ப்ராசஸர் (processor), பேட்டரி, ஏஐ அம்சங்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் மிலிட்டரி கிரேட் ஆகியவைகள் வெளிப்படுத்தப்பட்டுள் நிலையில். தற்போது, மிக முக்கியமான தகவலான இதன் விலை விவரமும் தெரியவந்துள்ளது. ஐக்யூ இஸட்11 லைட் மாடலானது "ரூ.20,000-க்கும் குறைவான விலையில்" அறிமுகமாகும் என்று ஐக்யூ உறுதிப்படுத்தியுள்ளது.
ரூ.20000 க்குள் என்பது சலுகைகள் அனைத்தும் போக கிடைக்கும் இறுதி விலையா (net effective price) அல்லது உண்மையான விற்பனை விலையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் "பட்ஜெட் பிரிவில்" (budget segment) அறிமுகமான பல ஸ்மார்ட்போன்களின் விலைகள் தற்போது உயர்ந்து விட்டதால், குறிப்பிட்ட விலை வரம்பில் புதிய ஸ்மார்ட்போன் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு ஆப்ஷன் ஆக அமையலாம்.
ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் 44W பிளாஷ்சார்ஜ் (FlashCharge) ஆதரவு மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி ஹெல்த் (five year battery health) உடனான 6,500mAh பேட்டரி இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 1,200 நிட்ஸ் (nits) வரையிலான ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே உள்ளது. வெளிப்புற வெளிச்சத்திலும் ஸ்க்ரீனை தெளிவாகப் பார்க்கும் வகையில், இப்பிரிவிலேயே இது மிக அதிக பிரகாசம் கொண்ட டிஸ்பிளே என்று ஐக்யூ கூறுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை - மலிவு விலை போன்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களின் விருப்ப தேர்வாக மாறியுள்ள மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் இதில் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொண்டு இயங்கும் மற்றும் இதற்கு நான்கு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (security updates) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போனுக்கு எத்தனை முறை ஓஎஸ் அப்கிரேட்கள் (OS upgrades) வழங்கப்படும் என்பதை ஐக்யூ நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
இதுதவிர்த்து ஆவணங்களை சுருக்கமாகத் தொகுத்தல், உரையை மாற்றி எழுதுதல், உள்ளடக்கத்தை மொழிபெயர்த்தல் மற்றும் புதிய யோசனைகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கான ஏஐ கிரியேஷன் (AI Creation) டூல்கள் மற்றும் விரிவுரைகள் அல்லது கூட்டங்களின்போது நேரடி உரை மாற்றம் (live transcription), மொழிபெயர்ப்பு மற்றும் ஒரே டேப்பில் (Tap) சம்மரியை பெறுதல் ஆகியவற்றுக்கான ஏஐ கேப்ஷன்ஸ் (AI Captions) உள்ளிட்ட பல்வேறு ஏஐ டூல்களும் இதில் கிடைக்கும்
கடைசியாக ராணுவத் தரத்திலான உறுதித்தன்மை (Military-Grade Durability), SGS 5-Star தரத்திலான கீழே விழுந்தாலும் சேதமடையாத திறன் (drop resistance), அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கான 'Dynamic Light' வசதி ஆகியவைகளும் ஐக்யூ இஸட்11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் இருக்கும். இது Solar Flame மற்றும் Midnight Blue ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
OPINION: என்னை பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட அம்சங்களுடன், ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐக்யூ இஸட்11 லைட் ஆனது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனில் இருந்து அல்லது 4ஜி மாடலில் இருந்து அப்கிரேட் ஆக விரும்பும் எவருக்குமே - ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். முன்பு வெளியான ஐக்யூ இஸட்10 லைட் 5ஜி மாடலை நான் நேரடியாக பயன்படுத்தி உள்ளேன். ஆகையால் இதை என்னால் தைரியமாக சொல்ல முடியும்.
ஆனால் பெர்பார்மன்ஸ்-க்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்கள், ஐக்யூ இஸட்11 லைட் அறிமுகமாகி, அதன் ரிவ்யூ வரும்வரை காத்திருக்கவும். ஏனென்றால் ரூ.20000 க்குள் என்கிற விலை வரம்பை அறிவித்த ஐக்யூ, ரேம் (RAM), ஸ்டோரேஜ் (storage) குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை
முன்னரே குறிப்பிட்டபடி இந்தியாவில், இப்போதைய சூழலில் இந்த விலைப்பிரிவு (ரூ.20,000) மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது. பெரிய பேட்டரிகள், மென்மையான டிஸ்பிளேக்கள் மற்றும் உறுதியான வடிவமைப்பு போன்ற சிறப்பம்சங்களை நிறுவனங்கள் வழங்கினாலும், மெமரி உதிரிபாகங்களின் விலை உயர்வு காரணமாக வாங்குபவர்களுக்கான மதிப்பு (value proposition) கணிசமாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் ரூ.10,000 அல்லது ரூ.15,000- க்கும் குறைவான விலைப் பிரிவில் வழங்கப்பட்ட அம்சங்கள், இப்போது ரூ.25,000 க்கும் குறைவான விலைப் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வண்ணம், ஐக்யூ இஸட்11 சீரீஸின் மற்றொரு மாடலான ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x) இந்தியாவில் ரூ.18,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது ரூ.22,999 க்கு விற்கப்படுகிறது.
அதாவது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஐக்யூ இஸட்11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது, இந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் இதுவரை பார்த்திராத புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, மாணவர்கள் மற்றும் சாதாரண பயனர்களை கவரும் வகையிலான ஏஐ டூல்களை சேர்த்து, ஏற்கனவே உள்ள பல அம்சங்களை ஒரே தொகுப்பாக வழங்குகிறது.
இந்த உத்தி வெற்றிபெறுமா என்பது பெரும்பாலும் அதன் சரியான விலை நிர்ணயத்தை பொறுத்தே அமையும். ஐக்யூ இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,000 க்கும் குறைவான விலைப் பிரிவின் குறைந்தபட்ச விலைக்கு அருகில் அறிமுகப்படுத்தினால், இது பல ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு சிறந்த ஆல்டர்நேட்டிவ் ஆக அமையக்கூடும். மீதமுள்ள கருத்துக்களை ஜூலை 24 ஆம் தேதி அன்று நடக்கும் அறிமுகத்தின் போது பகிர்கிறேன்.


Click it and Unblock the Notifications