பகுதி நேர வேலை: விமர்சனம் செய்வதன் மூலம் சம்பளம்.! ரூ.76 லட்சத்தை இழந்த பெண்.! முழு விவரம்.!
தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம் அதேபோல் இந்த டிஜிட்டல் யுகத்திலும் இருக்க வேண்டும். அதேபோல் சிறுக சிறுக சேமித்த பணம், உங்கள் முக்கிய புகைப்படம் வீடியோக்கள் என அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கின்றன.
டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்வதன் மூலம் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.76 லட்சத்தை மோசடி செய்த கும்பலை காவல்துறை தேடிவருகிறது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஹரியான மாநிலம், குருகிராமில் இருக்கும் எம்.என்.சி நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணிபுரிபவர் திவ்யா. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திவ்யாவுக்கு மீரா என்ற பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் இது என்ன வேலை என்று திவ்யா கேட்டதற்கு செல்போனில் தான் வேலை என்று கூறியுள்ளார்.
அதாவது Bitmaxfilm.com என்ற செயலியில் இருக்கும் படங்களைப் பார்த்து அதை விமர்சித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அந்த பெண் திவ்யாவுக்குக் கூறியுள்ளார். உடனே படம் பார்ப்பதற்குச் சம்பளமா என்று வியந்த திவ்யா அந்த வேலைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு,தேஜஸ்வி என்ற மற்றொரு பெண் அவருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு இந்த வேலைக்கான நிபந்தனைகள் பற்றி சில தகவல்களைத் தெரிவித்து, ஒரு நாளைக்கு ஒரு டிக்கெட் அதாவது 28 வீடியோக்களை பார்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஒரு டிக்ககெட்டின் விலை ரூ.10,500 பணம் செலுத்தி Bitmaxfilm.com-ல் ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார் அந்த பெண்.
அதன்பின்பு இந்த டிக்கெட்டை வெற்றிகரமாக முடித்ததும் டிக்கெட் பணமும், பட விமர்சனத்துக்கான பணமும் வழங்கப்படும் என்றும், அதற்கு அடுத்தும் நீங்கள் விரும்பினால் தொடரலாம் என்றும் நம்பிக்கை வார்த்தைக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை நம்பிய திவ்யாவும் பணத்தைக் கட்டி படம் பார்த்து முடித்திருக்கிறார்.
ஆனாலும் பணத்தைத் தராமல், அடுத்த டிக்கெட் வாங்கினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று கூறி இப்படியே மொத்தமாக ரூ.76 லட்சம் வரை தன் சேமிப்பு பணத்தை இழந்திருக்கிறார் திவ்யா. அதேபோல் ஒவ்வொரு முறையும் கொடுத்த பணத்தையாவது மீட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் தான் தொடர்ந்து பணம் செலுத்தத் தொடங்கினேன். ஆனால் இறுதியில் தான் அவர்கள் ஏமாற்றுப்பேர்வழிகள் என்பதை உணர்ந்தேன் என்று திவ்யா காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய காவல்துறை தரப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்துவருகிறோம். விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம் என்றும், மக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம். டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications








