அதுக்குள்ள இருந்து தான் வருது! பிளாக் ஹோலை கண்காணித்த விஞ்ஞானிகளுக்கு கிடைத்த திகிலூட்டும் உண்மை!
வெவ்வேறு பிளாக் ஹோல்களை (Black Holes) கண்காணித்து வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் மண்டையை குழப்பிய ஒரு விண்வெளி மர்மம் தொடர்பான பதில் கிடைத்துள்ளது. அதென்ன மர்மம்? விஞ்ஞானிகள் அப்படி எதை கண்டுபிடித்தனர்? பிளாக் ஹோலுக்குள் இருந்து என்ன வருகிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
கடந்து செல்லும் ஒளியை கூட விட்டு வைக்காத அளவுக்கு மிகவும் வலுவான ஈர்ப்பு சக்தியை கொண்டுள்ள பிளாக் ஹோல்களுக்குள், வேறொரு விஷயம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம் ஹவாய் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

பிளாக் ஹோலிற்குள் என்ன உருவாகிறது?
பிளாக் ஹோல்களுக்குள் என்ன உருவாகிறது என்பதை பற்றி பேசும் முன், டார்க் எனர்ஜி (Dark Energy) என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் எல்லாவற்றையும் சரியாக புரிந்துகொள்ள முடியும்.
டார்க் எனர்ஜி என்றால் என்ன?
இயற்பியல் அண்டவியல் (Physical cosmology) மற்றும் வானவியல் (Astronomy) வல்லுனர்களின் கூற்றுப்படி, டார்க் எனர்ஜி என்பது இந்த பிரபஞ்சத்தை மிகப்பெரிய அளவுகளில் பாதிக்கும் ஒரு அறியப்படாத ஆற்றல் வடிவம் (Unknown form of energy) ஆகும்.
இது விண்வெளியை எந்த அளவிற்கு ஆட்கொள்கிறது என்றால்.. இந்த பிரபஞ்சத்தின் மொத்த நிறை-ஆற்றல் அடர்த்தியில் 68% டார்க் எனர்ஜியே ஆகும் (மீதமுள்ள 27% டார்க் மேட்டர் (Dark Matter) மற்றும் 5% நார்மல் மேட்டர் (Normal Matter) ஆகும்).
20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பும் டார்க் எனர்ஜி!
கிட்டத்தட்ட பிரபஞ்சம் முழுவதுமாக பரவி கிடந்தாலும் கூட, இந்த டார்க் எனர்ஜி எங்கிருந்து வருகிறது? எங்கே உருவாகிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் கடந்த 20 ஆண்டுகளாக கிடைக்காமலேயே இருந்தது. ஆனால் தற்போது அதற்கான பதில் கிடைத்து விட்டது போல் தெரிகிறது.
பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இயக்கும் மர்ம சக்தியின் பிறப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது!
வெவ்வேறு விண்மீன் திரள்களில் (Galaxies) உள்ள பிளாக் ஹோல்களின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்த பிறகு, டார்க் எனர்ஜியானது பிளாக் ஹோல்களுக்குள் உருவாக்கப்படலாம் என்கிற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
டார்க் எனர்ஜியின் உருவாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுமே, பிரபஞ்சத்தை மிகவும் வேகமாக விரிவுபடுத்தும் மர்ம சக்தியாக கருதப்படும் டார்க் எனர்ஜியானது பிளாக் ஹோல்களிலிருந்து வரலாம் என்கிற முடிவையே வழங்கி உள்ளன.
டார்க் எனர்ஜி ஒரு புதிர் என்றால்.. டார்க் மேட்டர் ஒரு பெரும்புதிர்!
டார்க் எனர்ஜியை போலவே டார்க் மேட்டரும் (Dark Matter) கூட தன்னுள் பல வகையான மர்மமங்களை புதைத்து வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் டார்க் மேட்டர் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
- பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் இருந்தே டார்க் எனர்ஜி இருக்கிறதா அல்லது இடையில் உருவானதா? இந்த கேள்விக்கு இதுவரையிலாக பதில் கிடைக்கவில்லை!
- டார்க் மேட்டர் எந்த வகை துகள்களால் (Particles) ஆனது? அதன் பண்புகள் (Properties) என்ன? யாருக்குமே தெரியாது!
- டார்க் மேட்டர் ஒரே வகையான துகள்களால் ஆனதா? ஒரே கூறுகளாக பிணைக்கப்பட்டுள்ளதா? சிறிய சிறிய கட்டமைப்புகளில் இருக்குமா? அல்லது பெரிய கட்டமைப்பாக இருக்குமா? பதில் இல்லை!
- டார்க் மேட்டருக்கு அழிவே இல்லையே அல்லது என்றாவது ஒரு நாள் அது அழிந்துவிடுமா? இது தொடர்பாகவும் எந்த விளக்கமும் இல்லை!
Photo Courtesy: Britannica / NASA


Click it and Unblock the Notifications








