கொலை காண்டு பிடித்து அலையும் ரஷ்யா; அலறும் அமெரிக்கா!
ஸ்பேஸ் எலிவேட்டர், அதாவது விண்வெளிக்கு செல்ல உதவும் லிப்ட் சோதனை ஓட்டத்தை நடத்த தேவையான வேலைகளை செய்து வருகிறது.
இரண்டாவடது அடி பெரிய அடி. அதற்கு முன் முதல் அடி பற்றி சுருக்கமாக பேசி விடலாம். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு - பூமிக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் சரி (விண்வெளியில் இருந்து விண்கல் விழுதல், சூரிய வெடிப்பு, ஏலியன் தாக்குதல்), இவர்கள் தான் காப்பாற்றுவார்கள்.

இதர நாட்டு ஹீரோக்களும் காப்பாற்றலாம் என்கிற மனப்பக்குவம் இருந்து இருந்தால் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நமது சக்திமானுக்கும் (இஸ்ரோ) ஒரு இடம் கிடைத்து இருக்கும் அல்லவா? இங்குதான் நுழைந்தது ஜப்பான் நாட்டு சூப்பர் ஹீரோ ஆன சூப்பர் சென்டாய் (ஜப்பான் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்).

நான் தான் டா கொம்பு
விண்வெளி ஆராய்ச்சி என்றாலே "நான் தான் டா கொம்பு" என்று பெருமை பாடி கொண்டிருந்த நாசாவிற்கு, ஜப்பான் ஒரு இன்ப அதிச்சியை கொடுத்தது. ஸ்பேஸ் எலிவேட்டர், அதாவது விண்வெளிக்கு செல்ல உதவும் லிப்ட் சோதனை ஓட்டத்தை நடத்த தேவையான வேலைகளை செய்து வருகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் விண்வெளிக்கு பொருட்களை எடுத்து செல்லும் செலவு "அடிமாட்டு அளவுக்கு" குறையுமாம் அதே சமயத்தில் நாசாவின் வயிறு பொறாமையில் புகையுமாம்.

பரம்பரை பகையாளி
இந்த முதல் அடியின் வலி மறைவதற்குள், அமெரிக்காவிற்கான அடுத்த அடியை அதன் "பரம்பரை பகையாளி" ஆன ரஷ்யா கொடுத்தது. அந்த அடி அமெரிக்காவிற்கு பிரத்யேகமான அடி தான் என்றாலும் கூட இதர நாடுகளும் கொஞ்சம் "கப்சிப்" என்றாகி உள்ளனர். ஏனெனில் அது ஒரு ஆயுதமாகும். அதுவும் சாதாரண ஆயுதம் அல்ல. மணிக்கு 24,696 கிமீ வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் ஒரு ஏவுகணை ஆகும்.
இன்னும் சொல்லப்போனால் இந்த நொடி வரையிலாக உலகில் உருவாக்கம் பெற்ற, உருவாக்கம் பெற்றுக்கொண்டு இருக்கும் எந்தவொரு ஏவுகணையை விடவும் இதுதான் மிகச்சிறந்த அணு ஏவுகணை ஆகும்.

சூப்பர்சோனிக்
ரஷ்யா ஒரு புதிய சூப்பர்சோனிக் ஏவுகணை முறைமையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. அதனை பறைசாற்றும் படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், "அமெரிக்க பாதுகாப்பு முறைகளுக்கு இது வளைந்து கொடுக்காது. 2019 ஆம் ஆண்டில் நமக்கு சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது, அது சார்ந்து கடந்த புதனன்று நடந்த சோதனையும் வெற்றிகரமான இருந்தது" என்று கூறியுள்ளார்.

புடின்
"ஒரு புதிய வகை மூலோபாய ஆயுதத்தை உருவாக்கம் செய்வதில் ரஷ்யா, உலகில் முதன்மையானது, இது நமது நாட்டின் பாதுகாப்பையும், நமது மக்களின் பாதுகாப்பையும் அடுத்த பல தசாப்தங்களுக்கு உறுதி செய்யும்" என்று புடின் தெரிவித்து உள்ளார். மேலும் "இது புத்தாண்டு நாளுக்கு ஒரு அற்புதமான, அருமையான பரிசு." என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை
கூறப்படும் ரஷ்யாவின் புதிய அதிவேகமான ஏவுகணை ஆனது டாம்பராவ்ஸ்கி இராணுவ விமான தளம் இருந்து சோதிக்கப்பட்டது. முன்பு வெளியான அறிக்கைகளின் படி இது ஒரு கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை ஆகும். அதாவது இது மற்றொரு கண்டத்தில் உள்ள ஒரு நாட்டிற்கு எதிராக பயன்படுத்த படலாம் என்று அர்த்தம். இது மார்ச் 20 என்கிற வேகத்தின் கீழ் அதாவது மணிக்கு 24,696 கிமீ வேகத்தில் பறக்குமாம்.

உயரம் மற்றும் திசை
இந்த ஆயுத அமைப்பானது, செல்லும் பாதையில் வழிநடத்தப்படும் ஒரு சறுக்கலான போர் தந்திரத்தை கொண்டு உள்ளது. அதாவது இந்த ஏவுகணை ஆனது எதிர் தாக்க வரும் அல்லது தடுக்க வரும் ஆயுதத்திடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வண்ணம் அதன் உயரம் மற்றும் திசை ஆகிய இரண்டையும் மாற்றி அமைக்கும் திறனை கொண்டு உள்ளது. அது மட்டும் இன்றி குறுக்கீடுகளை தவிர்க்கும் நோக்கத்தில் இது தரையின் மிக அருகாமையில் கூட பறக்கும். கடந்த மார்ச் மாத பாராளுமன்ற உரையில், "நடைமுறையில் இதை தடுக்க முடியாது" என்று புதின் கூறி இருந்ததற்கான அர்த்தம் இப்போது தான் தெரிய வருகிறது.

பென்டகன்
பென்டகன் உட்பட, அமெரிக்காவின் ஆயுத அமைப்பு வல்லுநர்களின் படி, ரஷ்யாவின் இந்த அதிவேகமான ஏவுகணை ஆனது சாத்தியம் இல்லாத ஒன்று என்கிற சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது ரஷ்யா தனது புதிய இராணுவ திறன்களைப் பற்றி பெருமிதம் கொள்ள முற்படுவதாகவும், இது யதார்த்தத்தில் நடக்காத ஒன்று என்றும் கூறிவிட்டது. இம்மாதிரியான தொழில்நுட்பம் நிச்சயமாக சாத்தியம் தான் என்று அவர்கள் சொல்கிறார்கள், ஆனால் அதை ரஷ்யாவால் செய்ய சாத்தியம் இல்லை என்பதே அவர்களின் வாதம்.

"பொய் பொய்"
இப்படி அமெரிக்க "பொய் பொய்" என்று அலறுவதற்கும் ஒரு காரணம் உண்டு. அது, அமெரிக்க பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய செயற்கைக்கோள்களாலும் ரேடரிலும் கூட ரஷ்யாவின் புதிய ஏவுகணை ஆனது சிக்காது என்பது தான். இந்த ராணுவ பாதுகாப்பு ஓட்டையை "அடைக்க" அமெரிக்கா, புதிய, மேம்படுத்தப்பட்ட சென்சார்களின் கீழ் பணியாற்ற வேண்டியதாக இருக்கும்.

உலக நாடுகள் ஏன் மிகவும் வேகமான ஏவுகணைகள் மீது கவனம் செலுத்துகின்றன?
ஏனெனில் இன்னும் மோசமான, இன்னும் அதிவேகமான ஏவுகணைகள் ஆனது எதிராளியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காது. போதுமான நேரத்துடன் தாக்குதலை எதிர்கொள்ளும் நாடானது, தப்பித்து வெளியேறும் வாய்ப்பும் குறையும். என்னவொரு கொலை காண்டு!


Click it and Unblock the Notifications