ரெடியா இருங்க.. ஒவ்வொரு இரவும் குறையும் 1 டிகிரி தூரம்.. மார்ச் 1ல் நடக்க போகும் இறுதிக்கட்டம்!
உற்று கவனிக்காத வரையிலாக, விண்வெளியில் எதுவுமே நடக்காதது போலத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் நம் தலைக்கு மேலே பெரும் நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் ஒரு அரிய பச்சை நிற வால் நட்சத்திரமானது, பூமியை கடந்து சென்றது அல்லவா? அது இப்போது நமது சூரிய குடும்பத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டது!
மனித இனம், அந்த பச்சை நிற வால் நட்சத்திரத்தை மறுபடியும் பார்க்க அடுத்த 50,000 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். அதற்காக இனிமேல் வேறு எந்த அரிய நிகழ்வுமே விண்வெளியில் நடக்காது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!

ரெடியா இருங்க.. இன்னொரு அரிய விண்வெளி நிகழ்வு நடக்க உள்ளது!
அடுத்த சில நாட்களுக்கு நீடித்து, வருகிற மார்ச் 1 ஆம் தேதியன்று இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள மற்றொரு அரிய விண்வெளி நிகழ்வு, இரவு நேர வானத்தில் நடக்க உள்ளது.
அது என்னவென்றால் - நமது சூரிய குடும்பத்தில் உள்ள 2 பிரகாசமான கோள்களான வீனஸும், ஜூப்பிட்டரும் (Venus And Jupiter) ஒன்றுக்கொன்று நெருங்கி வர உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இதுவொரு அரிய பிளானட்டரி கன்ஜக்ஷன் (Rare Planetary Conjunction) ஆகும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்நிகழ்வின் போது ஜூப்பிட்டர் மற்றும் வீனஸ் ஆகிய இரண்டும் அடுத்த சில நாட்களுக்கு ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பது போல காட்சியளிக்கும். பின்னர் ஒருகட்டத்தில், இவ்விரண்டு கிரகங்களுக்கு இடையேயான அதிகபட்ச நெருக்கம் மார்ச் 1 ஆம் தேதியன்று நிகழும்!
ஒவ்வொரு இரவும் குறையும் 1 டிகிரி தூரம்!
ஸ்பேஸ்.காம் வழியாக வெளியான அறிக்கையின்படி, இம்மாத தொடக்கத்தில் ஜூப்பிட்டர் மற்றும் வீனஸ் கிரகங்களுக்கு இடையேயான தூரம் தோராயமாக 29 டிகிரி இருந்தது. இருப்பினும் இந்த தூரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. இன்னும் தெளிவாக கூறவேண்டுமென்றால் சராசரியாக ஒரு இரவுக்கு ஒரு டிகிரி தூரம் குறைகிறது!
இப்படியாக நேற்று (அதாவது பிப்ரவரி 20 அன்று), இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரம் 9 டிகிரிக்கு வந்துள்ளது. மேலும், வருகிற பிப்ரவரி 27 அன்று, இந்த கிரகங்களுக்கு இடையிலான இடைவெளி வெறும் 2.3 டிகிரியாக குறையும்.
கடைசியாக மார்ச் 1 அன்று, இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையேயான தூரம் வெறும் 0.52 டிகிரி மட்டுமே இருக்கும். அதன் பின்னர் இந்த 2 கிரங்களுக்குமான இடைவெளி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியுமா?
முன்னரே குறிப்பிட்டபடி ஜூப்பிட்டர் மற்றும் வீனஸ் ஆகிய இரண்டுமே மிகவும் பிரகாசமான கிரகங்கள் ஆகும். வானத்தில் உள்ள மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸை விட ஜூப்பிட்டர் கிரகம் 2 மடங்கு அதிக பிரகாசமானதாக உள்ளது. மறுபுறம் உள்ள வீனஸ், ஜூப்பிட்டரை விட 6 மடங்கு பிரகாசமானதாக உள்ளது.
இருந்தாலும் கூட, வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஜூப்பிட்டர் மற்றும் வீனஸின் அதிகபட்ச நெருக்கத்தை காண உங்களுக்கு விண்வெளி தொலைநோக்கி (Space Telescope) தேவைப்படும். அதாவது இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியாது!


Click it and Unblock the Notifications








