செயற்கை அறிவு நுட்பம் (AI) தொடர்பான தேசிய அணுகுமுறையை வெளியிட்டது நிதி ஆயோக்.!

  ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இந்தியத் திட்டக்குழுவுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்ட புதிய அமைப்பு நிதி ஆயோக் (NITI Aayog ) என்பதாகும். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு செயற்கை அறிவுநுட்பம் (AI) தொடர்பான தேசிய அணுகுமுறை குறித்த கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

  செயற்கை அறிவு நுட்பம் (AI) : தேசிய அணுகுமுறையை வெளியிட்டது நிதி ஆயோக்.

  செயற்கை அறிவு நுட்பம் தொடர்பான தேசிய அணுகுமுறை குறித்து நிதி ஆயோக் குழுவின் விவாதங்களும் முடிவுகளும் கடந்த வாரம் வெளியிடப்படன. இவை, புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியச் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்குத் துணை நிற்கும் வகையில் செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற 5 துறைகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது நிதி ஆயோக். உடல் நலம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் சிட்டிஸ் மற்றும் கட்டமைப்பு, போக்குவரத்து ஆகியவை அந்த ஐந்து துறைகளாகும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  செயற்கை அறிவு நுட்பம் (AI) என்றால் ?.

  செயற்கை அறிவு நுட்பம் (AI) என்பது, சூழலுக்கு ஏற்பச் சிந்தித்தல், செயல்படுதல், கற்றல், சிக்கல்களைத் தீர்த்தல், முடிவுகளை எடுத்தல் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கும் வகையில் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழில் நுட்பத்தைக் குறிக்கும்.

  நிதி ஆயோக்கின் நோக்கம்

  சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கி அவர்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லல் என்கின்ற இந்திய அரசின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதற்கு ஏற்பத் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள நிதி ஆயோக் விரும்புகிறது. "நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ள ஐந்து துறைகளில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு அந்தத் துறைகளை காலத்துக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு, செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பயன்படுத்திக் கொள்ளப்படும்." என்கிறார், நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி, அமிதாப் காந்த்.

  வளர்ச்சி மற்றும் வருமானம்

  செயற்கை அறிவுத் தொழில் நுட்பம், தரமான மருத்துவம் மற்றும் சுகாதாரத்தை அனைவரும் பெற உதவும் அதே வேளையில், விவாசாயிகளின் வருமானம் உயரவும், விளைச்சல் பெருகவும், சேதத்தைக் குறைக்கவும் துணை நிற்கும் எனவும் நிதி ஆயோக்கின் அறிக்கை குறிப்பிடுகிறது.

  எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பம்

  கல்வியின் தரத்தை உயர்த்தவும், மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்களில் கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கண்டு பாதுகாப்பான சிறந்த போக்குவரத்து வசதியினை வழங்கவும் செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் உதவுமென நிதி ஆயோக்கின் அறிக்கை கூறுகிறது.

  பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன்

  செயற்கை அறிவு போன்ற தொழில் நுட்பங்கள் நாம் வாழும் காலத்தில் நிகழ்கின்ற முக்கிய அறிவியல் வளர்ச்சியாகும். எனவே, இதனைச் சாத்தியமாக்கிச் செயல்படுத்துவதற்கு ஏற்ற அணுகுமுறைகள், குறிப்பாக தேசிய அளவிலான உத்திகளை வகுப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் இத் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஏற்படுகின்ற பொருளாதாரத் தாக்கம் மற்றும் அதனால் விளைகின்ற சமூக நலன் ஆகிய இரண்டுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள இயலும். மொத்தத்தில் செயற்கை அறிவு நுட்பம் தொடர்பான தேசியக் கொள்கை பொருளாதாரா வளரச்சியையும், அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்வதாக இருக்கும் என நிதி ஆயோக்கின் அறிக்கை கூறுகிறது.

  இந்தியா எதிர் கொள்ளும் தடைகள்

  செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் செயலாக்கம் அடையும் பொழுது அதனுடைய முழுமையான பயனை இந்தியா அனுபவிக்க இயலாத வகையில் சில தடைகள் இருப்பதையும் நிதி ஆயோக்கின் அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது. செயற்கை அறிவு நுட்பம் தொடர்பான பரந்துபட்ட அறிவு பெற்ற நிபுணர்களின் பற்றாக்குறை, அதிகமான செலவு, தொழில்நுட்பம் தொடர்பாக அதிகமான விழிப்புணர்வின்மை, தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவை அத்தகைய தடைகளில் அடங்கும்.

  இரண்டு அடுக்கு அமைப்பு

  செயற்கை அறிவு நுட்பம் தொடர்பான இந்தியாவின் ஆய்வுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த இரண்டு அடுக்கு கொண்ட அமைப்பினையும் நிதி ஆயோக்கின் அறிக்கை பரிந்துரை செய்கிறது. மேன்மைமிக்க ஆய்வு மையம் (Centre of Research Excellence (CORE)), உயர்நிலை மாற்றத்திற்கான செயற்கை அறிவு நுட்ப சர்வதேச மையங்கள்( International Centres of Transformational AI (ICTAI)) ஆகிய இரண்டு மையங்களைப் பரிந்துரை செய்கிறது. செயற்கை அறிவு நுட்பம் தொடர்பாக நிகழ்த்தப்படும் ஆய்வுகளைத் தெளிவுபடுத்தவும், அந்த ஆய்வுகளின் வழியாக தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் அமைப்புகளை மேம்படுத்துவதிலும் மேன்மைமிக்க ஆய்வு மையம் (Centre of Research Excellence (CORE)) கவனம் செலுத்தும். இந்த ஆய்வுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் பணியை, உயர்நிலை மாற்றத்திற்கான செயற்கை அறிவு நுட்ப சர்வதேச மையங்கள்( International Centres of Transformational AI (ICTAI)) மேற்கொள்ளும். தனியார் துறையுடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதையும் இம்மையத்தின் முக்கியப் பணியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

  நிதி அமைச்சகத்தின் வேண்டுகோள்

  நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, காலத்திற்கு ஏற்ற ஆய்வுகளையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள, செயற்கை அறிவு நுட்பம் தொடர்பாகத் தேசியத் திட்டத்தை வகுக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப, நிதி ஆயோக், செயற்கை அறிவு நுட்பம் தொடர்பான தேசியக் அணுகுமுறை குறித்த கருத்துக்களைத் தற்போது வெளியிட்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  NITI Aayog Releases National Strategy on AI, Identifies 5 Focus Areas : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more