“பென்னு” விண்கல்லை நெருங்கிய ஆஸ்ரிஸ் ரெக்ஸ் விண்கலம், புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது!
ஆஸிரிஸ் ரெக்ஸ் விண்கலம் இந்த விண்கல்லைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த விண்கல் ஒரு மலையைப் போன்று காட்சி தருகிறது. இதனுடைய விட்டம் 500 யார்டுகள் (457 மீட்டர்) ஆகும்.
விண்கற்கள் அல்லது உடுக்கோள்களைப் (asteroid) பற்றி ஆய்வு செய்து அதனுடைய மாதிரிகளைப் பூமிக்கு எடுத்து வருவதற்காக நாசாவால் விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்கலம் ஆஸிரிஸ் ரெக்ஸ் (OSIRIS-Rex). இந்த விண்கலம் 800 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மகாணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏவப்பட்ட இந்த விண்கலம் பென்னு (Bennu) என்னும் மிகப் பழமையான விண்கல்லை நெருங்கியுள்ளது. இந்த விண்கலம் எடுத்து வரும் விண்கற்களின் துகள்கள் சூரியக் குடும்பத்தில் உயிர்களின் தோற்றத்திற்கான காரணத்தை ஆராய உதவியாக இருக்கும்.

ஆஸிரிஸ் ரெக்ஸ் விண்கலம் இந்த விண்கல்லைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த விண்கல் ஒரு மலையைப் போன்று காட்சி தருகிறது. இதனுடைய விட்டம் 500 யார்டுகள் (457 மீட்டர்) ஆகும்.பென்னு என்னும் விண்கல்லைச் சுற்றி வரும் வகையில் ஆஸிரிஸ் ரெக்ஸ் விண்கலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரோபோடிக் கை (robotic arm) விண்கல்லை ஆய்வு செய்து அதில் இருந்து மாதிரிகளை சேகரித்து 2023 ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பி வரும்.
1.4 மில்லியன் மைல் தொலைவில் இருந்து பென்னுவின் முதல் புகைப்படத்தை இந்த விண்கலம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி எடுத்துள்ளது. “இதற்கு முன்பு பென்னு உடுக்கோளை இந்த அளவுக்கு நெருக்கமாக நாம் கண்டதில்லை” என்கிறார், ஆஸிரிஸ் ரெக்ஸ் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர், தான்டே லாரெட்டா.
சூரிய மண்டலத்தில் உள்ள 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்கற்களில் ஆய்வுக்காக பென்னு விண்கல்லைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்றால், அதனுடைய சுற்று வட்டப்பாதை பூமியின் பாதைக்கு அருகில் இருப்பபதுதான். ஆய்வுக்குத் தேவையான சரியான அளவில் இந்த விண்கல் உள்ளது. அது மட்டுமல்லாமல், இது மிகவும் பழமையான விண்கல்லாகும்.

இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என்கின்ற அச்சம் வானியல் அறிஞர்களிடம் உள்ளது. 2135 ஆம் ஆண்டில் இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது என இவர்கள் கருதுகின்றனர். ஆனால் இதற்கான வாய்ப்பு 2700-க்கு ஒன்று என்னும் விகிதத்தில் மட்டுமே உள்ளதால் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.
இந்த விண்கல்லில் கார்பன் அதிகமாக உள்ளது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்ற ஒரு விண்கல் மூலமாகத்தான் உயிர்கள் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த பொருள் பூமிக்குக் கிடைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விண்கற்களைப் பற்றி ஆய்வு செய்து அதன் மாதிரிகளை எடுத்து வர மேற் கொள்ளும் முயற்சிகள் புதியது அல்ல. இதற்கு முன்னால் ஜப்பான் இது போன்ற ஆய்வை நிகழ்த்தியுள்ளது. ஐரோப்பா தன்னுடைய விண்கலத்தை வால்மீன் (comet) ஒன்றின்மீது இறக்கியுள்ளது.விண்கல்லில் இருந்து மாதிரியை எடுத்து பூமிக்குத் திரும்பும் வகையில் விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது இதுதான் முதல் முறை. முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவாக 2.1 அவுன்ஸ் (60 கிராம்) அளவு விண்கல் துகள்களை எடுத்து வர முயற்சிப்பது இதுதான் முதல்முறை.
1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் அப்போலோ விண்கலம் மூலம் விண் வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்ற பொழுது, நிலவிலிருந்து 842 பவுன்ட் (382 கிலோ கிராம்) அளவுள்ள பாறைக் கற்களை எடுத்து வந்தனர்.
வருகின்ற டிசம்பர் மாதத்தில் ஆஸ்ரிஸ் ரெக்ஸ் விண்கலம் பென்னு விண்கல்லின் மேற்புறத்தை மிக விரிவாக ஆய்வு செய்யவுள்ளது. வட்டப் பாதையில் இணைவது டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீலை 2020-க்குப் பிறகுதான் விண்கல் துகள்களைச் சேகரிக்கும் பணி தொடங்கும்.

Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer என்பதன் சுருக்கமாகத்தான் இந்த விண்கலத்திற்கு OSIRIS-Rex எனப் பெயரிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








