நிலவ தொட்டா பவருடா.! நிலவை சுக்குநூறாக பெயர்த்து எடுக்கப்போகும் Amazon ஓனர்.! எதற்காக தெரியுமா?
பூமியில் (Earth) இருக்கும் வளங்களை எடுத்து, அதிலிருந்து ஏதேனும் ஒரு பயனுள்ள படைப்பை உருவாக்குவது மனிதனின் இயல்பு. குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, இத்தகைய கூத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதே உண்மை.!
உதாரணமாக, இரண்டு கற்களை உரசினால் நெருப்பை (Fire) உருவாக்க முடியும் என்று குரங்கில் இருந்து தோன்றிய - முதல் ஆதிகாலத்து மனிதன் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. விலங்குகளின் தோலில் இருந்து, ஆடைகளை உருவாக்குவது என்று, கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் அவர்களை சுற்றியுள்ள அனைத்து பொருட்களிலும் இருந்து, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கத் துவங்கினர்.

இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் அதிகப்படியான வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிய மனிதனின் ஆசை, இன்று பூமியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்கள் (Planets), நிலவுகள் (Moons) மற்றும் விண்கற்களில் (Meteorites) உள்ள வளங்களை மனித ஆற்றலுக்காகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இத்தகைய ஆசையின் விளைவாக, ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கப் போவதாக அமேசான் நிறுவனத்தின் சொந்தக்காரர் ஆனா ஜெஃப் பெசோவின் குழு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
செவ்வாய் (Mars) கிரகத்தில் முதல் மனித காலனியை உருவாக்குவதற்கு முன்னதாக, மனிதக்குலம் முதலில் நிலவில் (Moon) ஒரு காலனியை அமைக்க வேண்டும். சந்திரனில் பூமி போன்ற வாழ்க்கை நிலைமைகளை உருவாக்க, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். அப்படி நிலவில் உருவாக்கப்படவிருக்கும் மனித காலனிகளை (Moon human colonies) சக்தியுடனும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய புதிய தீர்வுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், விஞ்ஞானிகளுக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகத் தெரிகிறது. காரணம், சந்திரனின் தூசி (Moon dust) நிறைந்த மேற்பரப்பைப் பயன்படுத்தி, சோலார் பேனல்களை (Solar panel) தயாரிக்க முடியும் என்ற வினோதமான ஐடியாவை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான, ஜெஃப் பெசோஸின் (Jeff Bezos), ப்ளூ ஆரிஜின் (Blue Origin) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் "ப்ளூ அல்கெமிஸ்ட் (Blue Alchemist)" என்ற திட்டம் இதைச் சாத்தியப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னேற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. சந்திர மண்ணிலிருந்து (Moon sand), சூரிய மின்கலங்கள், அதாவது சோலார் செல்கள் (Solar cells) மற்றும் மின்சாரம் கடத்தும் கம்பிகளை (electricity transmission wires) உருவாக்க முடிந்தது என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த உருவகப்படுத்தப்பட்ட மண் சந்திரனில் உள்ள ரெகோலித் (Moon regolith) போன்றது, அது அங்கு ஏராளமாக உள்ளது. "மோல்டன் ரெகோலித் எலெக்ட்ரோலிஸிஸ் (molten regolith electrolysis)" எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம், ப்ளூ ஆரிஜின் சோலார் செல்களை நிலவு மண்ணில் இருந்து உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது.
இந்த செயல்பாட்டில், அதிக வெப்பநிலையில் (1,600° செல்சியஸுக்கு மேல்) சந்திர மண் அல்லது நிலவின் ரெகோலித் நேரடி மின்சாரத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த செயல்முறையானது கோட்பாட்டளவில் ஆராய்ச்சியாளர்கள் அலுமினியம் (aluminum), இரும்பு (iron) மற்றும் சிலிக்கான் (silicon) ஆகியவற்றைச் சந்திர ரெகோலித்தில் இருந்து பிரித்தெடுக்க அனுமதிக்கும். இந்த செயல்முறையின் மூலம் 99.999% தூய்மையான சிலிக்கானை நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்து சோதித்துவிட்டதாகவும் கூறுகிறது.

இது பெரிய விஷயமே இல்லை. ப்ளூ அல்கெமிஸ்ட்டின் முக்கிய வெற்றி என்னவென்றால், விஞ்ஞானிகள் இந்த எதிர்வினையின் துணை தயாரிப்புகளை, சோலார் செல்கள் மற்றும் ஒரு சோலார் செல் பாதுகாப்பு கண்ணாடி மூடியை (protective glass cover) உருவாக்கியுள்ளனர். இது சோலார் செல்களை 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சந்திரனில் உயிர்வாழச் செய்யும் என்று கூறியுள்ளனர். சந்திரனில் இருக்கும் வளத்தை வைத்து, இப்படி ஒரு சக்தியை உருவாக்க முடியுமா? என்ற சந்தேக கேள்விக்கு ப்ளூ ஆரிஜின் இப்போது விடை அளித்துள்ளது.
இப்போது, ப்ளூ ஆரிஜின் இந்த தொழில்நுட்பத்தை நாசாவிற்கு (NASA) அதன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் சாத்தியமான பயன்பாட்டிற்காகச் சந்தைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் (Artemis programme) மனிதர்களை நிலவில் தங்க வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்திர வளங்களை மட்டுமே பயன்படுத்தி, சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் ப்ளூ ஆரிஜினின் குறிக்கோள் நாசாவிற்கு கிடைத்த ஜாக்பாட் என்றே நாம் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications