NASA-க்கே தெரியாத கேள்விக்கு பதில் கிடைக்க வழி செய்த இந்திய விஞ்ஞானிகள்!விண்மீன் திரள் கண்டுபிடிப்பு
விண்வெளியில் ஒளிந்துள்ள பல மர்மங்களை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் போட்டி போட்டு உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாசா ஆராய்ச்சி மையத்திற்கு முன்பாக இந்திய வானியல் விஞ்ஞானிகள் தற்பொழுது அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரளை கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் புதிய கண்டுபிடிப்பிற்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளிவருட தொலைவில் உள்ள புதிய விண்மீன் திரளை இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலத்தின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்மீன் திரள்களிலிருந்து வெளிப்பட்ட அடர்த்தியான அல்ட்ரா வயலட் கதிர்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய விண்மீன் திரளை புனேவில் உள்ள வானியல் பல்கலைக்கழக விஞ்ஞானி கனக் சாஹா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு தற்பொழுது நாசா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. நாசா அனுப்பியுள்ள செய்தியில், 'விஞ்ஞானம் என்பது உலகெங்கிலும் உள்ள கூட்டு முயற்சியாகும், இது போன்ற கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம், நாம் தனியாகத் தான் உள்ளோமோ போன்ற கேள்விகளை உருவாக்குகிறது. இதற்கான சரியான விடையும் இவற்றில் தான் ஒளிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் விண்கலத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய விண்மீன் திரளுக்கு 'AUDFs01' என்று நாசா பெயரிட்டுள்ளது. நாசாவின் கூற்றுப்படி இவை 'Big Bang' நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக தோன்றிய விண்மீன் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாட்களில் அண்டமானது இருள், சாவோஸ், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் போன்றவற்றால் ஆனதாகக் கருதப்படுகிறது.

அண்டம் எப்படி உறுவது என்ற கருத்தை இந்த கண்டுபிடிப்பு தெளிவுபடுத்தும் என்று நாசா கூறியுள்ளது.அண்டம் குளிர்ச்சி அடைந்த பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் தோன்றின, அதன் பின் ஒளி பரவ ஆரம்பித்தது. இதன் மூலம் அண்டத்தின் இருண்ட காலம் முடிவடைந்தது, ஒளி எப்படி உருவானது போன்ற கேள்விகளுக்கான விடை இதன் கண்காணிப்பில் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த கண்டுபிடிப்பின் மூலம் அண்டத்தின் ஆரம்ப கால உருவாக்கம் பற்றித் தெளிவு கிடைக்கும் என்று நாசா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications