கடல்ல கால் வச்சா கதம் கதம்.. 2650 கிலோ எடை கொண்ட ISRO மிலிட்டரி சாட்டிலைட்.. GSAT-7R என்ன செய்யும்?
நாசா (NASA) உடனான கூட்டணியின் கீழ் வெற்றிகரமான நிசார் மிஷனை (NISAR Mission) தொடர்ந்து, இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 முக்கியமான இராணுவ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது
அவைகள் ஜிசாட்- 7ஆர் (GSAT-7R) மற்றும் டிடிஎஸ் (TDS) செயற்கைக்கோள் ஆகும். இந்த இரண்டுமே இந்தியாவின் கடற்படை தொடர்பு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பை (India's naval communication and surveillance network) கணிசமாக மேம்படுத்த உள்ளன மற்றும் உள்நாட்டு விண்வெளி திறன்களை மேம்படுத்த உள்ளன.

இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிசாட்- 7ஆர் சாட்டிலைட் ஆனது கடந்த 2013 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ஜிசாட்- 7 ருக்மிணி செயற்கைகோளுக்கு அடுத்தபடியாக ஏவப்படும் செயற்க்கைகோள் ஆகும். ருக்மிணி சாட்டிலைட் ஆனது நீண்ட காலமாக கடற்படை தகவல்தொடர்புகளின் முதுகெலும்பாக இருந்து வருகிறது.
ஜிசாட்- 7 ருக்மிணி ஆனது இந்தியப் பெருங்கடல் முழுவதும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கரையோர கட்டளை மையங்களுக்கு இடையே பாதுகாப்பான நிகழ்நேர இணைப்புகளை செயல்படுத்துகிறது. இதனை தொடர்ந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிசாட்- 7ஆர் செயற்கைகோள் ஆனது இந்திய கடற்படை தகவல்தொடர்புகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லவுள்ளது.
ஜிசாட்- 7ஆர் சாட்டிலைட் ஆனது சுமார் 2,650 கிலோ எடையுள்ளதாகவும், புவிசார் சுற்றுப்பாதையில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.1,589 கோடி மதிப்புள்ள ஜிசாட்- 7ஆர் செயற்கைக்கோள் ஆனது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 2 (GSLV Mk-II) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும்.
மேம்படுத்தப்பட்ட பேலோட்களுடன், ஜிசாட்- 7ஆர் ஆனது இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் ப்ளூ-வாட்டர் நடவடிக்கைகளுக்கு - பாதுகாப்பான மற்றும் மல்டிபேண்ட் தகவல்தொடர்புகளை விரிவுபடுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மீள்தன்மை இந்தியாவின் நெட்வொர்க்-சென்ட்ரிக் போர் திறன்களை வலுப்படுத்தும் மற்றும் முக்கியமான கடல்சார் களங்களில், கடற்படையின் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்தும்.
ஜிசாட்-7 ருக்மிணி சாட்டிலைட்டை ஜிசாட்-7ஆர் உடன் மாற்றுவதன் மூலம், இந்திய கடற்படை மிகவும் வலுவான மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு திறன்களை பெறும். இது சிதறடிக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் சொத்துக்களில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு முக்கியமானதாக இருக்கும். ஜிசாட்-7ஆர் செயற்கைக்கோள் ஆனது சிக்கலான கடல்சார் பயணங்களில் தடையற்ற இணைப்பை உறுதி செய்யும், அதே நேரத்தில் வெளிநாட்டு விண்வெளி அடிப்படையிலான உள்கட்டமைப்பை நம்பியிருப்பதையும் குறைக்கும்.
ஜிசாட்-7ஆர் செயற்கைகோள் ஒருபக்கம் இருக்க இஸ்ரோவானது டிடிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த செயற்கைகோளின் தொழில்நுட்ப விவரங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோவின் இந்த மேம்பட்ட செயற்கைக்கோள் ஆனது உள்நாட்டு தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
முன்னரே குறிப்பிட்டபடி, மேற்குறிப்பிட்ட 2 செயற்கைக்கோள்களும் இஸ்ரோவின் 2025 ரோட்மேப்பின் ஒரு பகுதியாக ஏவப்படுகிறது. இதில் 75000 கிலோ வரை எடையுள்ள பொருட்களை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமந்து செல்லும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை கனரக ராக்கெட்டின் வளர்ச்சியும் அடங்கும். 40 மாடி கட்டிடம் அளவிற்கு உயரமாக நிற்கும் இந்த ராக்கெட், இந்தியாவின் ஏவுதள திறனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது வரை சுமார் 55 இஸ்ரோ செயற்கைக்கோள்கள் விண்ணில் உள்ளன. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய ஜிசாட்-7ஆர் மற்றும் டிடிஎஸ் ஆகிய இரண்டும் இணைந்து, இந்தியாவின் பரந்த விண்வெளி லட்சியங்களை முன்னேற்றும் மறுகையில் இந்திய கடற்படை பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications