சந்திரயான் 3 எப்போது ஏவப்படும்? ISRO விஞ்ஞானிகள் முக்கியத் தகவல்.!
இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரோ சார்பில் பல விண்வெளி ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்பு குறைந்த செலவில் இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு விண்வெளி திட்டமும் உலக நாடுகளுக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைந்துள்ளது.
அதேபோல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்குக் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. குறிப்பாக சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி சந்திரயான்-2 ஆனது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. குறிப்பாக 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடைந்தது சந்திரயான்-2 விண்கலம். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
இருந்தபோதிலும் அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்னவென்றால், நிலவு பற்றிய ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்பு இந்த முறை விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம், என்விஎஸ்-2 எனப்படும் நேவிகேஷன் (வழிகாட்டுதல்) செயற்கைக்கோளினை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் மே 29-ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
அதேபோல் சமீபத்தில் சந்திரயான்-3 திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியது என்னவென்றால், துல்லியமாகத் தரையிறக்குவது சந்திரயான்-3 இன் முதன்மை நோக்கம். அதற்குத் தேவையான கருவிகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றால் நிலவைப் பற்றிய பல்வேறு ரகசியங்கள் வெளியுலகுக்குத் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








