சந்திர மண்ணை வைத்து பல திட்டம் போடும் சீனா: நிலவின் மண்ணில் செடி வளர்க்க முடியுமா?
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்துள்ளது. தற்போது மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்த சீனா
சீனாவின் சாங் விண்கலம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர கோடிக்கணக்கில் சீனா முதலீடு செய்துள்ளது. நிலவில் இருந்து மண், பாறைகள் போன்ற மாதிரிகளை சேகரித்துக் கொண்டு விண்கலத்தின் கேப்சூல் பூமிக்கு வந்தடைந்தது.

சந்திரனில் எடுத்துவரப்பட்ட மணல் சோதனை
நிலவில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இதேபோல் சந்திர மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியல் உள்ள கரிம மண்ணை போல் சந்திரினில் இருக்கும் மணல் மாதிரிகள் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஊட்டச்சத்துகள் இல்லாத மணல்
சந்திரனில் இருக்கும் மண்ணில் கரிம ஊட்டச்சத்துகள் இல்லை எனவும் அவை மிகவும் வறண்டவையாக உள்ளது என்பதால் அதில் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி வளர்ப்பதுக்கு உகந்ததல்ல என சிசிடிவி தொகுப்பாளரான ஜுகுவாங்குவான் வெய்போவில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரிவித்தார்.

மின்சாரம் தயாரிக்க முடியும்
அதேபோல் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி பார்க்கையில், சந்திர மண்ணில் காய்கறிகள் வளர்க்க உகந்தது இல்லை என்றாலும் வேறு வழிகளில் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. பல காலமாக சூரியக் காற்றானது சந்திர மண்ணில் ஹீலியம் 3-ஐ செலுத்தியிருக்கிறது. அது தூய்மையான ஆற்றலாக கூறப்படுகிறது. இந்த இணைவு மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும் என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சந்திரனில் உயிரியல் சோதனை
முன்னதாக ஜனவரி 2019-ல் சீன விண்கலமான சாங் 4 மூலம் சந்திர மண்ணில் பருத்தி விதைகள் விதைக்கப்பட்டது. விதைகள் வளர்ச்சிகரமான சூழலுடன் வளர்ந்தாலும் ஒரு வாரத்திற்கு பிறகு அந்த செடிகள் இறந்துவிட்டதாக அட்லாண்டிக் செய்தி தெரிவித்தது. சந்திரனில் உயிரியல் பொருள் முதன்முதலில் சோதனை செய்யப்பட்ட நாடு சீனாவாக திகழ்ந்தது.

வெஜ்ஜி என்று அழைக்கப்படும் செடி வளர்ப்பு பணிகள்
இருப்பினும் சந்திரனுக்கு பதிலாக சர்வதேச விண்வெளி மையத்தில் பயிர்களை வளர்த்த பெருமையை நாசா கைப்பற்றியது. இந்த காய்கறி உற்பத்தி முறையானது வெஜ்ஜி என அழைக்கப்படுகிறது. விண்வெளி நிலையத்திலேயே விண்வெளி தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம்
பூமியில் இருந்து சுமார் 408 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தங்கியுள்ள வீரர்களுக்கு பூமியில் கிடைப்பது போல் உணவுகள் கிடைக்காது. இதன்காரணமாக வைட்டமின் சத்து மாத்திரைகளை அங்கு தங்கியிருக்கும் வீரர்கள் உட்கொள்கிறார்கள்.

அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கிகள்
இதையடுத்து குளிர்சாதன பெட்டி இயந்திரம் ஒன்றை உருவாக்கி ஆக்சிஜன் வாயு, செயற்கை சூரிய ஒளி உமிழும் கருவி உள்ளிட்டவைகளை உருவாக்கி செடிகளை வளர்க்கும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூமியில் இருந்து மண், உரம், விதைகளை கொண்டு செடிகள் வளர்க்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதில் பாதி செடிகள் கருகிவிட்டது எனவும் முள்ளங்கிச் செடிகள் முழுவதுமாக வளர்ந்ததாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மணல்கள்
அதேபோல் தற்போது சந்திரனில் இருந்து சீனா எடுத்துவந்த மணல்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளது என குளோபல் டைம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஆய்வகங்களுக்கும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அருங்காட்சியகங்களிலும், சந்திர தரவு மேலாண்மை விதிமுறைகளின்படி சர்வதேச சமூகத்துடனும் பகிர்ந்துக் கொள்ளப்பட உள்ளது. அதேபோல் இந்த மாதிரிகள் சீனாவிற்கு நெருக்கமாக இருக்கும் நாடுகளுக்கு பகிரப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications