ஆபத்தில் சிக்கியவர்களைக் கண்டுபிடித்து மீட்கும் ரோபோ:மாணவர்களின் அசத்தலான கண்டுடிப்புகள்!
இணையதள இணைப்புடன் கூடிய மொபைல் போன் மூலமாக உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த ஹெக்சாபோட் ரோபோவைக் கட்டுப்படுத்தலாம்.
பெங்களுரைச் சேர்ந்த சப்தகிரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் “ஹெக்சாபோட் (Hexapod) என்னும் பெயரில் புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். சிலந்திப் பூச்சியைப் போன்ற வடிவுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளதால் இப்பெயர் வைத்துள்ளனர். பேரிடர் மற்றும் ஆபத்துக் காலங்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற இந்த ரோபோ உதவும். இதனைப் போன்றே பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்மார்ட் ஸ்டிக் ஒன்றையும் இக்கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இணையதள இணைப்புடன் கூடிய மொபைல் போன் மூலமாக உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த ஹெக்சாபோட் ரோபோவைக் கட்டுப்படுத்தலாம். 360 டிகிரி கோணத்தில் அனைத்துத் திசைகளிலும் திரும்பக் கூடிய வகையிலான கேமரா, வெப்பநிலை மற்றும் ஈரப் பதத்தைக் கண்டறியும் சென்சார் ஆகியவைகளுடன் இந்த ரோபோ இயங்குகிறது. “மாறுபட்ட இருவகையான வேகத்தில் எல்லாத் திசைகளிலும் இயங்கக் கூடியது இந்த ரோபோ” என்கிறார், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த நால்வருள் ஒருவரான அனுதீப் மேதிசெட்டி என்னும் மாணவர்.
மீட்புப் பணியின்போது பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மைக் ஒன்றும் இந்த ரோபோவில் பொருத்தப்பட்டு உள்ளது. தன்னுடைய வழியில் உள்ள தடைகளை அர்டுய்னோ சென்சார் (Arduino sensor) மூலம் கண்டறிந்து அவைகளைக் கடந்து இந்த ரோபோ செல்லும்.
அணுஉலைகள் அமைந்துள்ள பகுதிகளில் நிலவும் வெப்ப நிலையைக் கண்டறிந்து சொல்வதற்கும், இராணுவத்திற்காக உளவு பார்க்கும் பணிகளுக்கும் இந்த ரோபோவைப் பயன்படுத்தலாம்.

தற்போதைய இதன் விலை 25,000 ரூபாய் ஆகும். அதிக அளவில் உற்பத்தி செய்யும் பொழுது இதனுடைய விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.“பூச்சிகளின் நகர்வுகளைக் கண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. சுரங்கத் தொழிலில் இந்த ரோபோவுக்கான பயன்பாடு அதிகமாக இருக்கும்” என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ரோபோவை வடிவமைத்தவர்கள் சப்தகிரி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அரவிந்த் வல்சலன், ஹர்சா, அனுதீப் மேதிசெட்டி, தீபக் குமார் ஆகிய நால்வர் ஆவர்.
பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் ஸடிக்
பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் தடைகளின்றி சுதந்திரமாக உலாவுவதற்கு ஏற்ற வகையிலான ஸ்மார்ட் ஸ்டிக் ஒன்றினையும் இக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதனுடைய விலை குறைவானது என்பதும் இதனுடைய சிறப்பு ஆகும். பாதையில் உள்ள தடைகள், நீர் தேங்கியுள்ள பகுதிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து உணா்த்தி அவற்றிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பாக பயணம் செய்ய இச்சாதனம் உதவும்.
பார்வையற்றவர்களுக்கான இந்த ஸ்மார்ட் ஸ்டிக் அல்ட்ராசோனிக் சென்சாருடன் இணைந்தது. இந்த சென்சார் நீர் தேங்கி இருப்பதையும் உணர்ந்து சொல்லும் திறனுடையது. இதில் இருந்து வெளிவரும் அல்ட்ராசோனிக் அலைகள் மூலமாக, செல்கின்ற வழியில், கால் முட்டிப் பகுதிக்குக் கீழேயும் மேலேயும் உள்ள தடைகளை உணர்ந்து கொள்ளலாம். வழியில் உள்ள தண்ணீர் மற்றும் பிற தடைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவது இந்த ஸ்மார்ட் ஸ்டிக்கின் தனிச் சிறப்பாகும்.

இந்த ஸ்டிக்கை எங்காவது தவற விட்டாலும் ரேடியோ அலைகள் வழியான தொலைவியக்கி (radio frequency remotes) மூலமாகக் கண்டுபிடித்து விடலாம். “ ஒவ்வொரு முறை இந்த ரிமோட்டை அழுத்தும் பொழுதும் ஸ்மார்ட் ஸ்டிக்கில் இருந்து ஒலியலைகள் வெளிவரும். பார்வையற்றவர்கள் மிக மெல்லிய ஒலிக்குறிப்புகளையும் அறிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள் எனவே அவர்கள் இந்த ஒலிக்குறிப்பின் வழியாகத் தவறவிட்ட ஸ்டிக்கை எளிதாக எடுத்துக் கொள்வர்.” என்கிறார் இந்தப் பொருளுக்கான கண்டுபிடிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த நான்கு மாணவர்களுள் ஒருவரான பவன் குமார் என்பவர். இவரோடு சேர்ந்து, பல்லவி, பூா்வா, ஷில்பா ஆகிய மூவரும் இணைந்து இந்தப் பயனுள்ள பொருளை உருவாக்கியுள்ளனர். பார்வையற்றவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஸ்டிக்குகளில் இருந்து இது பல வகையிலும் மாறுபட்டுள்ளது. பெருங்கூட்டம் உள்ள சாலைகள் மற்றும் ஒழுங்கற்ற சாலைகள் ஆகியவற்றைக் கடப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரும் துணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications