அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற "இரத்த பனி"! காரணம் என்ன தெரியுமா?
அண்டார்டிகாவில் 'இரத்த பனி'.! உக்ரைன் அமைச்சகத்தின் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வகம், அண்டார்டிகா வடகோடியில் அமைந்துள்ள கடற்கரையோர தீவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்தின் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த பேஸ்புக் பதிவு புகைப்படத்தில், அந்த ஆராய்ச்சி நிலையத்தை சுற்றி "இரத்த பனி" படிந்துள்ளதை காட்டுகிறது.

கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ், அப்படினா என்ன தெரியுமா?
பார்ப்பதற்கு கோரமாகத் தோற்றமளிக்கும் இந்த காட்சியினால் அங்கு திமிங்கலங்கலோ அல்லது கடல்நாய்கலோ வேட்டையாடப்பட்டுக் கொன்று குவிக்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதன் விளைவு அது இல்லை. இதற்கான உண்மை காரணம் கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்று அழைக்கப்படும் ஒரு நுண்ணிய பாசி வகையாகும். ஆங்கிலத்தில் பாசிகளை 'ஆல்கே' (algae) என்று அழைப்பார்கள்.

ஆல்கே vs கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் ஆல்கே
நமக்குத் தெரிந்த பாசி வகை அடர்ந்த பச்சை, பழுப்பு நிற பச்சை மற்றும் பிரகாசமான பச்சை போன்ற நிறங்களிலேயே அவற்றை பெரிதும் பார்த்திருப்போம். ஆல்கே அல்லது பாசி என்று சொன்னதும் உங்களுக்குப் பச்சை நிறம் கண்டிப்பாகக் கண்களுக்கு வந்து போய் இருக்கும். ஆனால், இந்த கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் மட்டும் சிவப்பு திறத்தில் தோற்றமளிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

இவை எப்படி உருவானது தெரியுமா?
இந்த வியக்கத்தக்கச் சிவப்பு நிற நுண்ணிய ஆல்கே தற்பொழுது, அண்டார்டிகாவில் உள்ள பல இடங்களில் படிந்துள்ளது. முக்கியமாக இந்த கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் அண்டார்டிகாவின் உறைபனி காலத்தில் ஏற்படும் எதிர்பாராத அதிகபட்ச வெப்பநிலை மாற்றத்தினால் உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூடான கோடையில் பனி உருகும்போது உறைபனி நீரில் இந்த ஆல்கே செழிப்பாக வளர்கிறது.

ஆல்கே ப்ளூம் (Algae Bloom)
அதிக வெப்பத்துடன் கோடை, பனிதுருவப் பகுதிகளைத் தாக்கும் போது இந்த ஆல்கேக்கள் பூக்கத் துவங்குகின்றன. இந்த ஆல்கே-க்கள் பூக்கத் துவங்கியதும் அந்த இடத்தில் உள்ள பனி மற்றும் பாறைகளைச் சுற்றிலும் இரத்தத்தை ஒத்த சிவப்பு நிறத்தில் கறை படியத் துவங்கிவிடும் என்று லைவ் சயின்ஸ் ஊடகம்தெரிவித்துள்ளது.

இறைச்சி மழை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இந்த நிகழ்வு முதன்முதலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அமெரிக்காவில் ஒரு முறை இறைச்சி மழை பெய்தது, இதை கண்டு மக்கள் பெரிதும் அஞ்சினார்கள். ஆனால், அது இறைச்சி இல்லை என்றும், ஆலங்கட்டி மழைத்துளியில் இந்த ஆல்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விழுந்த ஆலங்கட்டிகள் இறைச்சி போல் சிவப்பு நிறத்தில் தோற்றமளித்துள்ளது.

வாட்டர்மெலன் ஸ்னோவ்
பார்ப்பதற்குச் சற்று கோரமாக அச்சுறுத்தலாக இருந்தாலும் கூட, இந்த ஆல்கே ப்ளூமிங் நடந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு தர்பூசணியின் மனம் நினைவிற்கு வருமாம். இதனால் இதை "வாட்டர்மெலன் ஸ்னோவ்" அதாவது தர்ப்பூசணி பனி என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

சிவப்பு நிறத்திற்கான காரணம் என்ன?
கேரட் மற்றும் தர்பூசணிகளுக்கு அவற்றின் சிவப்பு நிறத்தை வழங்கும் கரோட்டினாய்டுகள்(carotenoids) என்ற அதே பொருள் தான், இந்த கிளாமிடோமோனாஸ் நிவாலிஸ் ப்ளூமிங் ஆல்கேவில் காணப்படுகிறது. இதனால் தான் இந்த ஆல்கே சிவப்பு நிறமாக தோற்றமளிக்கிறது என்று அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மையையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் பின்னால் ஒளிந்துள்ள மோசமான விளைவு
இது ஒரு இயற்கையான நிகழ்வின் அதிர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தாலும், இதன் பின்னால் ஒரு மோசமான விளைவும் ஒளிந்துள்ளது. பனிக்கட்டிகள் மேல் இந்த ஆல்கே வளர்ந்துள்ளதால் பனியை வேகமாக உருக வைக்கிறது. இதனால் பனிக்கட்டிகள் வேகமாக உருகி நீராக மாறி வருகிறது. ஏற்கனவே கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது என்று பலரும் புலம்பி வரும் நேரத்தில், இந்த ஆல்கே இன்னும் வேகமாகப் பனியை உருக்கி வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஆல்கே
சிவப்பு நிறம் குறைந்த சூரிய ஒளியை பனியிலிருந்து பிரதிபலிக்கக் காரணமாகிறது, இதனால் பனி வேகமாக உருகுகிறது. உருகும் பனி நீரில் இந்த ஆல்கே அதிக வேகத்தில் வளர்ந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவுகிறது. இப்பொழுது அண்டார்டிகாவின் பல இடங்களில் இந்த சிவப்பு நிற ஆல்கேவின் தாக்கம்பரவி வருகிறது.

இந்த ஆண்டில் இது முதல் முறை அல்ல
லைவ் சயின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி , இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆல்கே ஜனவரி மாதம், ஸ்பானிஷ் நகரத்தின் கடற்கரையைக் கடல் நுரையால் மறைத்து விழுங்கியுள்ளது. அதேபோல், கிழக்கு சீனக் கடலில் உள்ள தீவுகளைச் சுற்றியுள்ள கரையோரங்களை நீல நிறத்தில் இந்த ஆல்கேக்கள் பிரகாசிக்கச் செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications