வேலை செய்யாத விண்வெளி தொலைநோக்கியை வைத்து.. விஞ்ஞானிகள் செய்த வாய்பிளக்க வைக்கும் காரியம்!
90-கள் எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல்! ஏனென்றால் 90-களில் தான் சோனி (SONY) நிறுவனத்தின் முதல் பிளேஸ்டேஷன் அறிமுகமானது, அதுமட்டுமா? 90-களில் தான் கூகுள் (Google) நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை கட்டத் தொடங்கியது! இன்னும் துல்லியமாக, 1992 ஆம் ஆண்டில் முற்றிலும் மாயாஜாலமான ஒரு விஷயம் நடந்தது; அதுவும் பூமிக்கு வெளியே!
அது என்னவென்றால், 1992 ஆம் ஆண்டில் தான் விஞ்ஞானிகள் முதன்முறையாக நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை கண்டுபிடித்தனர். அந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான முற்றிலும் புதியதொரு வழியை திறந்துவிட்டது. அதுதான் - வேற்று கிரகங்களுக்கான (Alien Worlds) தேடல். அதாவது நமது சூரிய மண்டத்தில் உள்ள கடைசி கிரகத்திற்கு பின்னால் என்னென்ன உண்மைகள் ஒளிந்து கிடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான பேரார்வத்தின் தூண்டல்!

1992 ஆம் ஆண்டு தொடங்கிய அந்த தேடல், இன்று வரை நிறுத்தப்படவே இல்லை. அதன் விளைவாக நமக்கு கிடைத்தது என்ன தெரியுமா? இதுவரையிலாக, சூரிய குடும்பத்திற்கு (Solar System) அருகே உள்ள ஆயிரக்கணக்கான வேற்று கிரகங்கள், அதாவது எக்ஸோப்ளானெட்டுகள் (Exoplanets) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் சில நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதபடி மிகவும் விசித்திரமான கிரகங்களாக உள்ளன.
சில எக்ஸோப்ளானெட்டுகளில் - ரத்தினங்கள் மழையாக பொழிகின்றன, சில கிரகங்கள் - புத்தகங்களில் நாம் பார்த்த நரகத்தை பிரதிபலிக்கும் எரிமலை ஏரிகளால் நிரம்பி உள்ளன, சில எக்ஸோப்ளானெட்டுகள் ஆனது சுவர்க்கம் போல, மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றன; சில கிரகங்கள் - உருக முடியாத பனிப்பாறைகளை கொண்டுள்ளன. ஆனால் சில எக்ஸோப்ளானெட்டுகள் மட்டுமே - அச்சு அசலாக பூமியை போலவே இருக்கின்றன. அவைகள் தான் இந்த வேற்றுகிரக தேடலில் கிடைத்த மிக முக்கியமான வெற்றிகள் ஆகும்!
அப்படியாக, சமீபத்தில் நம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றி - மிகவும் அசாதாரணமான ஒரு வெற்றி ஆகும். ஏனென்றால், இனிமேலும் பயன்படுத்த கூடாது என்று கூறி ஒய்வு அளிக்கப்பட்ட ஒரு விண்வெளி தொலைநோக்கியை (Retired Space Telescope) பயன்படுத்தி 2 புதிய ஏலியன் உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 எக்ஸோப்ளானெட்டுகளுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு வேற்றுகிரகத்தை விடவும் மிகவும் வித்தியாசமானதாக உள்ளன. ஏனென்று தெரியுமா?
ஏனென்றால், அந்த 2 கிரகங்களும் தண்ணீரால் நிரம்பி உள்ளன! மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் (NASA) இரண்டு விண்வெளி தொலைநோக்கிகளை - அதாவது ஹப்பிள் டெலஸ்க்கோப் (Hubble Space Telescope) மற்றும் ஸ்பிட்சர் டெலஸ்க்கோப்பை (Spitzer space telescope) - பயன்படுத்தி எக்ஸோப்ளானெட்டுகளை தேடி உள்ளனர்.
அந்த இரண்டு தொலைநோக்கிகளில் ஒன்றான ஸ்பிட்சர் - ஒய்வு பெற்ற ஒரு ஸ்பேஸ் டெலஸ்க்கோப் ஆகும்; அதாவது அதன் செயல்பாடுகள் (Operations) கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியோடு முடிவடைந்தது விட்டன; ஆனாலும் விஞ்ஞானிகள் வேறு சில ஆராய்ச்சிகளுக்காக அதை பயன்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில் தான், தண்ணீரால் நிரம்பிய 2 புதிய ஏலியன் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவைகள் சுமார் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள லைரா விண்மீன் மண்டலத்தில் (Constellation Lyra) அமைந்துள்ள ஒரு கிரக அமைப்பில் (Planetary system) உள்ளன. கெப்லர்-138சி மற்றும் கெப்லர்-138டி என்று அழைக்கப்படும் இந்த கிரகங்களும் பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய கிரகங்கள் என்பதும், அதே சமயம் இந்த இரண்டு கிரகங்களுமே பெரும்பாலும் நீரினால் ஆனது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி 218 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்?
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - சொல்ல முடியாத தூரம். விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால். 1 ஒளி ஆண்டு (1 Light year) என்பது 9.461 ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் (9.461 trillion kilometres) ஆகும். ஆக 218-ஐ 9.461 ட்ரில்லியன் உடன் பெருக்கினால் எத்தனை கிலோ மீட்டர்கள் வரும் என்று நீங்களே கணக்கு போட்டு பாருங்கள்!


Click it and Unblock the Notifications