டெலிவரி பாய்ஸ் வயிற்றில் அடி.. 225 நகரங்களில் Zomato சேவை நிறுத்தம்.. இனி எந்தெந்த நகரங்களில் கிடைக்காது?
"தம்பி.. வியாபாரம் பண்ணது போதும்.. கடையை சாத்திட்டு கிளம்புங்க! என்று கூறும் அளவிற்கு பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோவின் (Zomato) சாம்ராஜ்யத்தில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அதென்ன ஓட்டை? எந்தெந்த நகரங்களில் சோமேட்டோவின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன? என்ன காரணம்? இதோ விவரங்கள்:
225 நகரங்களை விட்டு எஸ்கேப் ஆன Zomato
சோமேட்டோவின் சமீபத்திய வருவாய் அறிக்கையின்படி, நிறுவனத்தின் இழப்புகள் மேன்மேலும் விரிவடைந்துள்ளது. இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால், கடந்த டிசம்பரில் முடிவடைந்த காலாண்டு அறிக்கையின்படி, சோமேட்டோ நிறுவனத்திற்கு ரூ.346.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக, இந்தியாவில் உள்ள 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக சோமேட்டோ அறிவித்துள்ளது!
நிலைமையை சமாளிக்க மீண்டும் வந்த Zomato Gold
"இது மிகவும் எதிர்பாராத மந்தநிலையாகும். இது எங்களுடைய உணவு விநியோக லாபத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. இருப்பினும் நிர்ண்யம் செய்யப்பட்ட லாப இலக்கை அடைவதற்கான நல்ல நிலையில் தான் இருக்கிறோம்" என்று சோமேட்டோ கூறியுள்ளது.
மேலும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ், சோமேட்டோ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான கோல்ட் சந்தாவை (Gold subscription) மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
"இந்த திட்டம் (சோமேட்டோ கோல்ட்) வாடிக்கையாளர்களின் விசுவாசத்தையும், ஆர்டர்களையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; இந்த திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்" என்றும் சோமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது. இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
இனி எந்தெந்த நகரங்களில் Zomato சேவை கிடைக்காது?
225 நகரங்களை விட்டு வெளியேறியதை பற்றி பேசுகையில், "கடந்த சில காலாண்டுகளாகவே இந்த 225 நகரங்களின் செயல்திறனானது ஊக்கமளிக்கும்படி இல்லை, மேலும் இந்த 225 நகரங்களில் நாங்கள் செய்த முதலீடுகளும் கூட லாபத்தை நோக்கி செல்வது போல் தெரியவில்லை" என்று சோமேட்டோ குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சோமேட்டோவின் இந்த நடவடிக்கையால் எந்தெந்த நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தெளிவான விவரங்களோ அல்லது எந்தெந்த நகரங்களில் சோமேட்டோவின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்கிற பட்டியலோ இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அதுதொடர்பான தகவல் / பட்டியல் வெளியாகும் என்று நம்புகிறோம்.
Zomato வில் 800 பேருக்கு வேலை வாய்ப்பு!
225 நகரங்களில் இருந்து வெளியேறிய கையோடு, சோமேட்டோ நிறுவனமானது சுமார் 800 காலி பணி இடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள 225 நகரங்களில், சோமேட்டோவின் கீழ் டெலிவரி பெர்சனாக (Delivery Person) மற்றும் நிறுவன ஊழியர்களாக வேலை செய்தவர்களின் நிலைமை என்னவாக போகிறது என்கிற கேள்விக்கு மத்தியில்.. வெறும் 800 பேருக்கு வேலை வாய்ப்பு என்கிற சோமேட்டோவின் அறிவிப்பானது, "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்கிற விமர்சனத்திற்கு ஆளாகினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!


Click it and Unblock the Notifications