Zomato போட்டப்போடு.. பொசுக்குனு கட்டணம் உயர்வு.. இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து.. எவ்வளவு தெரியுமா?
வீட்டில் சமைக்க நேரமில்லை, ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டால் அலைச்சல், சரி ஆன்லைனில் ஆர்டர் போடுவோம் என்று சொமாட்டோ (Zomato) ஆப் பக்கம் செல்லும் கஸ்டமர்களுக்கு பிளாட்பார்ம் கட்டணம் பொசுக்குனு ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம், பிடித்த உணவை வீட்டில் செய்து சாப்பிடும் பழக்கம் அப்படியே ஆன்லைனுக்கு மாறிவருகிறது. அதிலும் நகரங்களில் வசிக்கும் மக்கள் கிடைக்கும் நேரத்தை சமையலுக்காக எதுக்கு ஒதுக்க வேண்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், 30 நிமிடங்களில் உணவு வீடு தேடி வந்துவிடுகிறது என்ற மனநிலைக்கு மாறி வருகின்றனர்.

இதனால், ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு வரும் ஆர்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், சொமாட்டோ கம்மியான விலைக்கு உணவுகளை கொடுக்கும் உணவகங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குவதால், மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பெரு நகரங்கள் மட்டுமல்லாமல், நகரங்களுக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராம்புறங்களுக்கும் உணவு டெலிவரி செய்ய தொடங்கிவிட்டது. சொல்லப்போனால், ஒரு நாளுக்கு 20 லட்சத்துக்கும் மேலான உணவு ஆர்டர்கள் சொமாட்டோ மூலம் நடக்கின்றன. இதனால், அந்த நிறுவனம் அவ்வப்போது கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
டெலிவரியின் போது பிளாட்பார்ம் என்னும் கட்டணத்தை வசூலிப்பது மட்டுமல்லாமல், இந்த கட்டணத்தை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இப்போது, ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்பார்ம் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் இந்த கட்டணம் ரூ.2ஆக இருந்தது.
அதன்பின் அதே ஆண்டின் அக்டோபரில் ரூ.3ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் கடந்த ஜனவரியில் ரூ.4ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது, ரூ.5ஆ உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிளாட்பார்ம் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் உயர்த்தப்படவில்லை. டெல்லி-என்சிஆர், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற பெரு நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இந்த பிளாட்பார்ம் கட்டண உயர்வு அமலாகியிருப்பதாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சொல்லப்போனால், மேற்கூறிய நகரங்களில் மட்டுமே சொமாட்டோ நிறுவனத்துக்கு அதிகப்படியான ஆர்டர்கள் கிடைக்கும். இதனால், இந்த பிளாட்பார்ம் கட்டண உயர்வு நேரடியாக பல லட்சம் கஸ்டமர்களுக்கு அதிருப்தியை கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த கட்டண உயர்வு மட்டுமல்லாமல், இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் சொமாட்டோ லெஜெண்ட்ஸ் எனப்படும் இன்டர்சிட்டி உணவு டெலிவரி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சேவையானது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் மற்றும் சட்ட சிக்கல்களை சந்தித்தது. இதனால், சிறப்பாக செயல்படாமல் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலேயே சொமாட்டோ லெஜெண்ட்ஸ் சேவைக்கு தலைவராக இருந்த சித்தார்த் ஜாவர் என்பவர் திடீரென ராஜினாமா செய்துவிட்டார். இதனால், இந்த சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சொமாட்டோ நிறுவனம், லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட் (Large Order Fleet) என்னும் சேவையை அறிமுகம் செய்தது.
இந்த சேவை மூலம் பல்க் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. அதாவது, 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே நேரத்தில் உணவு டெலிவரி செய்ய இதை பயன்படுத்தலாம். இதற்காக பிரத்யேகமான வாகனத்தையும் சொமாட்டோ நிறுவனம் வைத்திருக்கிறது. வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் சிறு விசேஷங்கள் அல்லது பார்ட்டிகளுக்கு இந்த சேவை நல்ல தேர்வாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications