உணவு வருவதற்கு தாமதம், திருப்பி எடுத்துச் செல்லுமாறு கூறிய பெண்: மூக்கை உடைத்த ZOMATO டெலிவரி பாய்?
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

கொரோனா தொற்று
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

அதிலும் ஸ்விக்கி சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குறிப்பிட்ட சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வழியும் ரத்தத்துடன் வீடியோ
இந்நிலையில் சொமாட்டோவில் இருந்து உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாவில் வழியும் ரத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளது இணையத்தில் அதிகம் வைரலாகி உள்ளது.

வெளிவந்த தகவலின்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஹிட்டேஷா சந்திரனே என்பவர் கலை நிபுணராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த மார்ச் 9-ம் தேதி அன்று சொமாட்டோவில் இருந்து உணவு ஆர்டர் செய்துள்ளார்.
பின்பு அந்த உணவு வருவதற்குச் சற்று தாமதமானதாக தெரிகிறது. எனவே ஆர்டரை ரத்து செய்யுமாறு சொமாட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிகொண்டிருந்தார் ஹிட்டேஷா சந்திரனே. அந்த சமயம் காமராஜ் என்ற உணவு டெலிவரி செய்யும் நபர் வந்துள்ளார். அப்போது ஹிட்டேஷாவுக்கும், காமராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹிட்டேஷா உணவு தாமதம் ஆனதால் அதை எடுத்து செல்லுமாறு காமராஜிடம் கூறியுள்ளார். பின்பு ஏன் இவ்வளவு தாமதமாக டெலிவரி செய்கிறாய் என்று ஹிட்டேஷா கேட்டுள்ளார். அதற்கு காமராஜ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது என்று எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து உணவை திருப்பி எடுத்து செல்லுமாறு ஹிட்டேஷா கூறியுள்ளார். ஆனால் அந்த டெலிவரி பாய் தொடர்ந்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஹிட்டேஷாவின் வீட்டிற்குள் அவர் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
எனவே தனது பாதுகாப்பிற்காக செருப்பைக் கையில் எடுத்ததாக கூறியுள்ளார் ஹிட்டேஷா. பின்பு இந்த சூழ்நிலையில் சொமாட்டோ டெலிவரி பாய், எனது மூக்கை உடைத்தாகஇன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஹிட்டேஷா தெரிவித்துள்ளார்.

தற்காப்புக்காக தடுத்தேன்
மேலும் இதுகுறித்து பேசிய சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜ், ஹிட்டேஷா என்னை செருப்பால் அடிக்க முயன்றார். ஆனால் நான் தற்காப்புக்காக தடுத்தேன், அப்போது அவர் கதவில் மோதி காயமடைந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

பின்பு இந்த இரண்டு தரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ நிறுவனம், இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் நடக்காது என்றும் கூறியுள்ளது. தற்சமயம் ஹிட்டேஷா வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications