சுத்தமான தமிழ் பெயரில் வெப் பிரௌசர் அறிமுகம் செய்த Zoho வேம்பு! தமிழன் எப்போதுமே தமிழன் தான்யா!
ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஒரு கிராமத்து மண் வாசனை தான். அதுவும் ஒரு தமிழன் வேஷ்டி சட்டையில், சைக்கிள் மிதித்துக்கொண்டு வரும் காட்சி தான் பலரின் கண்களுக்குள் வந்து சென்றிருக்கும்.
அந்த அளவிற்கு இந்த நிறுவனத்தின் பெயருடன் தமிழ் ஒட்டிவிட்டது. இத்தகைய நிறுவனம், இப்போது மற்றொரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளது. ஜோஹோ நிறுவனம் இன்று அதன் சொந்த வெப் பிரௌசர் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வெப் பிரௌசருக்கு நிறுவனம் சுத்தமான தமிழ் பெயரை சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'உலா' (Ulaa) என்ற பெயரில் நிறுவனம் வெப் பிரௌசரை அறிமுகம் செய்துள்ளது.

உலா (Ulaa) என்பது தமிழில் 'பயணம்' என்று பொருளாகும். தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் பிறந்து வளர்த்து, IIT மெட்ராஸ் இல் கல்லூரி முடித்த ஸ்ரீதர் வேம்புவால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமான திகழ்ந்து வருகிறது. Zoho நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்புவின் தமிழ் ஆர்வம், அவர் அறிமுகம் செய்துள்ள புதிய வெப் பிரௌசரிலும் தெளிவாக தெரிகிறது.
இப்போது பயன்பாட்டில் இருக்கும் கூகுள் குரோம், ஆப்பிள் சஃபாரி போன்ற வெப் பிரௌசர்கள் போல் இல்லாமல், இந்த உலா வெப் பிரௌசர் அதன் பயனர்களுக்கு அதிக பிரைவசி பாதுகாப்பை வழங்குகிறது. ஆம், கூகுள் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் பயனர்களின் தரவை 3 ஆம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்கின்றன. இத்தகைய செயலை ஜோஹோவின் உலா வெப் பிரௌசர் ஒருபோதும் செய்து என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
Ulaa என்ற இந்த வெப் பிரௌசர் தனியுரிமையை மையமாகக் கொண்ட பிரௌசர் ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்காக உலகளாவிய பிளாக் டிராக்கிங் மற்றும் இணையதள கண்காணிப்பு போன்ற திறன்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பல சாதனங்களை ஒரே நேரத்தில் தடையின்றி பயன்படுத்த இது அனுமதிக்கும் என்று நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Ulaa எந்த மூன்றாம் தரப்பினருடன் அதன் பயனர் தரவை கண்காணிக்கவோ அல்லது பகிரவோ மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஹோவின் CEO மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், "உலாவுடன், பயனர்கள் இணையத்தில் உலாவ தங்கள் தனியுரிமையை சமரசம் செய்ய வேண்டியதில்லை. இத்தகைய செயல் மற்ற பிரௌசர்களில் துரதிர்ஷ்டவசமாக ஒரு கண்காணிப்பு கண்ணிவெடியாக மாறியுள்ளதை நாங்கள் உணர்கிறோம். தனியுரிமை மையமாகக் கொண்ட பாதுகாப்பு சேவையை உலா வழங்குகிறது.
உலாவில் டிஎன்எஸ் ப்ரீஃபெட்ச்சிங் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தரவை கேச்சே செய்ய முடியாது. மோஷன் சென்சார்களால் மவுஸ் இயக்கம் மற்றும் கிளிக்குகளைக் கண்காணிக்க முடியாது. உலாவில் உள்ள விளம்பரம் மற்றும் தரவு கண்காணிப்பு தடுப்பான்கள் அங்கீகரிக்கப்படாத புஷ் அறிவிப்புகள், பாப்-அப்கள் மற்றும் நேரத்தைக் கண்காணிக்கும் அம்சங்கள் போன்ற பல விஷயங்களை இந்த வெப் பிரௌசர் தடை செய்கிறது மற்றும் தடுக்கின்றது." என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
லேப்டாப், கம்ப்யூட்டர் அல்லது வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் இணைய தளங்களை இணைக்கவும் தொடர்பு கொள்ளவும் உதவும் API-ஐயும் Ulaa முடக்குகிறது. ஏற்கனவே உள்ள பயனர்களுக்கான ஜியா தேடல் மற்றும் அனைத்து தாவல்களிலும் செயல்படும் பிரத்யேக குறிப்பு-எடுக்கும் இடமான ஜோஹோ நோட்புக் உள்ளிட்ட உற்பத்தித்திறனை அதிகரிக்கும் பயன்பாடுகளுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
Ulaa ஆனது Zoho Annotator ஐ உள்ளடக்கியது. இது ஒரு புதிய இலவச எக்ஸ்டென்ஷன் ஆக வருகிறது. இது வெப் பேஜ் மற்றும் படங்களுக்கு நேரடியாக நோட்ஸ்களை செயல்படுத்துகிறது. அனைத்து Chrome வெப் எக்சிடென்க்ஷன்களும் Ulaa உடன் இணக்கமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலா வெப் பிரௌசர் இப்போது Chrome Webstore இலிருந்து நேரடியாக இன்ஸ்டால் செய்ய கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








