YouTube வியூஸ்க்காக நடுவானில் வெடித்த விமானம்.. வெறிபிடித்த யூடியூபரின் சதி செயல் அம்பலம்!
யூடியூப்பில் (YouTube) வியூஸ் வரவேண்டும் என்று டிரெவர் ஜேக்கப் (Trevor Jacob) என்னும் யூடியூபர், ஒரு விமானத்தை நடுவானில் வெடிக்கவைத்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் நடந்து முடிந்து 2 ஆண்டுகளுக்கு பின்பு ஒரேவொரு தவறால் ஜேக்கப் மாட்டிக் கொண்டார். அதுகுறித்த விவரங்கள் இதோ.
மக்களையும் யூடியூப்பையும் பிரிக்கவே முடியாது. யூடியூப் வீடியோக்கள், பெரும்பாலான மக்களுக்கு நாள்தோறும் ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருக்கிறது. அன்றாடம் வேலை செய்த களைப்பில் வீட்டிற்கு சென்று, சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம், யூடியூப்பில் ஏதாவதொரு வீடியோவை பார்த்து முடித்தால்தான் பலருக்கு தூக்கமே வருகிறது.

வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், பல தரப்பட்ட விஷயங்களும் வீடியோக்களாக கிடைப்பதால், யூடியூப்பில் நாளுக்கு நாள் யூசர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள், யூடியூப் பயனர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப்பை பயன்படுத்துகின்றனர்.
இதனால், அதுசார்ந்த வேலைகளும் மிகப்பெருமளவில் உருவாகிவிட்டன. சொல்லப்போனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு (YouTuber) மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக யூடியூப் நிறுவனம் உருவெடுத்துள்ளது. யூசர்களுக்கு நிகராக யூடியூப் சேனல்கள் வந்துவிடும் நிலை கூட வரலாம். அப்படி யூடியூபர்கள் இடையே கடும்போட்டியே நிலவிவருகிறது.
சில யூடியூபர்கள் விபரீதமான காரியங்களை செய்து, வியூஸ்களை பெறுகின்றனர். அப்படிப்பட்ட காரியத்தில் அமெரிக்க யூடியூபரான டிரெவர் ஜேக்கப், ஒரு விமானத்தையே வெடிக்க வைத்து, சிக்கலில் மாட்டியிருக்கிறார். டிரெவர் ஜேக்கப், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிகவும் பிரபலமான யூடியூபராக இருந்துவருகிறார்.
இவரது வீடியோக்கள் வித்தியாசமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். அந்த வகையில், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இவர் கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா விமான நிலையத்திலிருந்து தனிவிமானத்தில் புறப்பட்டார். அப்போது இவரது விமானம் விபத்தில் சிக்கியது. இருப்பினும், இவர் பாராசூட் மூலம் பாதுகாப்பாக உயிர் தப்பினார். இந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பாராசூட்டில் இருந்தபடியே லைவ்வாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சக்கைப்போடு போட்டு வியூஸ்களை அள்ளியது. 30 லட்சம் வியூஸ்களை நெருங்கிவிட்டது. இந்த வீடியோவை பார்த்த சிலர், அவர் உயிர் தப்புவதில் குறியாக இல்லை. அந்த விபத்தை வீடியோவாக எடுப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார். இந்த சம்பவம் விபத்தாக இருக்க வாய்ப்பே கிடையாது. இதுவொரு திட்டமிட்ட செயல் என்று கருத்து தெரிவித்துவந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, உள்ளூர் போலீசார் விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்கு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு விபத்து நடந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஏனென்றால், ஜேக்கப் விபத்து நடந்த சில நாட்களில் அந்த இடத்தை யாருக்கும் தெரியாமல், சுத்தம் செய்துள்ளார். விமானத்தின் பாகங்களையும் அப்புறப்படுத்தியுள்ளார். இதனாலேயே அவர் மாட்டிக்கொண்டார். இதனடிப்படையில் கடந்தாண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், ஜேக்கப் அவரது வழக்கறிஞர்களிடம் உண்மையை தெரிவித்துள்ளார். தனக்கு வந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திட்டமிட்டு விமானம் வெடிப்பதை வீடியோ எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதோடு நீதிமன்றத்திலும் இதை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த செயலுக்காக ஜேக்கப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல அந்த ஸ்பான்சர்ஷிப் கொடுத்தது யார் என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் கலிபோர்னியா போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








