பல மாத சம்பளம் பாக்கி.. ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தை அடித்து நொறுக்கி தீவைத்த ஊழியர்கள்..
சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பெங்களூரு அருகே உள்ள கோலார் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐபோன் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளர்கள் கற்களை வீசி, கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி, வாகனங்களைச் சேதமடையச் செய்து, கணினிகள் மற்றும் லேப்டாப்களை தீவைத்துக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனம்
தைவான் தலைமையிடமான விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், கோலார் மாவட்டத்தின் நரசபுரா தொழில்துறை பகுதியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலை வளாகத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன் 7, லெனோவா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான ஐடி தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளப் பாக்கி கேட்டு நேற்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஐபோன் மற்றும் ஐடி தயாரிப்புகள் தயாரிக்கும் நிறுவனம்
ஐபோன் மற்றும் ஐடி தயாரிப்புகளைத் தயாரிக்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் தராமல் இழுத்து அடித்துள்ளது என்று ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பளம் கேட்டு போராடிய ஊழியர்களுக்கு நிறுவனம் சரியான பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் கலவரத்தைத் துவங்கியுள்ளனர். வளாகத்தின் கார்களை கவிழ்த்து, தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
'சம்பளம் தொடர்பான பிரச்சினை
'சம்பளம் தொடர்பான பிரச்சினைக்காக' பல தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தைக் கலவரமாக மாறியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் கற்களை வீசி, கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி, வாகனங்களைச் சேதமடையச் செய்து, கணினிகள் மற்றும் லேப்டாப்களை தீவைத்துக் கொளுத்தி நிறுவனத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
போலீஸ் அதிகாரி கூறுகையில், ''சம்பளம் தராவிட்டால், தொழிலாளர் நலத்துறை அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து வேலை பார்க்கும் நிறுவனத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்துவது நியாயமில்லை. இது ஊழியர்கள் செய்யும் சரியான காரியமில்லை, சம்பந்தப்பட்டவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications