வேற மாதிரி பிஎஸ்என்எல்.. 4G சேவைக்கு பிறகு மலிவு விலை.. குஷியில் கஸ்டமர்ஸ்.. ஆட்டமே வேற!
இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Ideo) போன்ற நிறுவனங்களை விட கம்மியான விலையில் திட்டங்களை கொடுத்துவரும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், 4ஜி சேவைக்கு பின்பு கட்டணத்தை உயர்த்துமா? என்ற கேள்வி அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அசூர வேகத்தில் 4ஜி டவர்களை மேம்படுத்தும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்து வருகிறது. அதே வேகத்தில் 4ஜி சிம் கார்டுகளை (BSNL 4G SIM) அதன் வாடிக்கையாளர்களிடையே கொண்டு சேர்க்கும் பணியும் மேற்கொண்டுள்ளது. சொல்லப்போனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் டவர் மேம்பாட்டு பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கின.

அவற்றில் சில மாவட்டங்களில் பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. இந்த வேகத்தை பார்த்தால், அடுத்த சில மாதங்களிலேயே 4ஜி சேவை கிடைத்துவிடும் போலிருக்கிறதே என்று அதன் வாடிக்கையாளர்களின் மனதிலும் ஆசை வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், அதற்கு சாத்தியமே கிடையாது. கடந்த ஜூலை மாதத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது கிடைக்கும் என்பது குறித்து அந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அதில், 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகளை முடிக்கவே டிசம்பர் மாதம் வரையில் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு பிறகு மேம்படுத்தப்பட்ட 4ஜி டவர்கள் சோதனை செய்யும் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் இருக்கின்றன. இந்த பணிகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேல் தேவைப்படும். ஆகவே, எப்படி பார்த்தாலும், கிட்டத்தட்ட 18 மாதங்கள் முன்களப் பணிக்களுக்கே செலவாகிறது.
இருப்பினும், 6 மாதங்களுக்கு முன்பே டவர் மற்றும் சிம் கார்டு பணிகளை தொடங்கிவிட்டதால், அடுத்த 12 மாதங்களுக்கு பின்பே பிஎஸ்என்எல் 4ஜி சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே, அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வமாகவே உறுதியாகிவிட்டது.
இதனிடையே பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வகுக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, வரவிருக்கும் இந்த புதிய திட்டங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் விலைக்கு நிகரான இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
"இவ்வளவு தாமதமாக வரும் 4ஜி சேவைக்கு, கட்டணம் வேறு உயர்கிறதா?" என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்த வேளையில், அவர்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல அந்த நிறுவனத்தின் வாரிய இயக்குநரான சந்தீப் கோவில் (Sandeep Govil, Board Director) தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் "பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி சேவைக்கு பின்பு, அதன் கட்டணங்களை உயர்த்த எந்த திட்டம் கிடையாது. 4ஜி சேவை மட்டுமல்லாமல், 5ஜி சேவைக்கான அப்கிரேட் பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 4ஜி சேவை கிடைத்துவிடும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதுபோல சேவை அதிகமாக தேவைப்படும் மாநிலங்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கலாம். ஆனால், நேரடியாக ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த ஆண்டு முதல் பிஎஸ்என்எல் திட்டங்களில் விலை குறைக்கப்படாவிட்டாலும், அவற்றின் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால், பெரிய அளவில் நெருக்கடிகளை வாடிக்கையாளர்கள் சந்திக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு சிக்னல் இடையூறு மற்றும் குறைவான இன்டர்நெட் வேகம் மட்டுமே மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. இவற்றை வரவிருக்கும் 4ஜி சேவை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 8 மாதங்களில் 4சேவை எவ்வாறு இருக்கப்போகிறது என்பது தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








