Wikipedia கதை முடிஞ்சது.. இதை செஞ்சது யார்? பெயரை சொல்லு.. இல்லனா? பொறுமை இழந்த இந்திய அரசு!
விக்கிபீடியா (Wikipedia) வலைத்தளமானது இந்திய அரசாங்கத்தின் (Indian Government) கிடுக்குபிடிக்குள் சிக்கி உள்ளது. இலவசமாக அணுக கிடைக்கும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா (Online encyclopedia) ஆன விக்கிபீடியா "பாரபட்சமான" மற்றும் "துல்லியம் இல்லாத" தகவல்களை (Bias and inaccuracy information) வழங்குவதாக கூறி இந்திய அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விக்கிபீடியாவை தொடர்பு கொண்ட தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (Ministry of Information and Broadcasting - MIB) ஆனது, விக்கிபீடியா தளத்தை ஏன் ஒரு இடைத்தரகராக (Intermediary) கருத வேண்டும், வெளியீட்டாளராக (Publisher) கருதக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது.

இந்திய அரசாங்கம் இப்படி பொங்கி எழ என்ன காரணம்? ஏஎன்ஐ (ANI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (Asian News International) பக்கத்தில் அவதூறான திருத்தங்களை (Defamatory Edits) சேர்த்த பயனர்களை பெயர்களை கூறாமல், அவர்களை பாதுகாதத்தன் விளைவாகவே விக்கிபீடியா இப்படி சிக்கி தவிக்கிறது.
இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) நடந்து வருகிறது. இதற்கிடையில் தான் வெளிவந்துள்ள இந்த நோட்டீஸ் விஷயத்தை இன்னும் சூடாக்குகிறது; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. தி எகனாமிக் டைம்ஸின் (The Economic Times) அறிக்கையின்படி, விக்கிபீடியாவின் தலையங்க கட்டுப்பாடு (Editorial control) சில நபர்களின் கைகளில் குவிந்துள்ளது தான் இந்திய அரசாங்கத்தின் இந்த கவலைக்கு முக்கிய காரணம் என்கிறது.
மேலும் அந்த அறிக்கையின்படி, ஒரு இடைத்தரகர் என்பதற்கு பதிலாக அதை (விக்கிபீடியாவை) ஏன் ஒரு வெளியீட்டாளராக கருதக்கூடாது என்றும் ஆன்லைன் என்சைக்ளோபீடியாவிடம் அமைச்சகம் கேட்டு உள்ளது. இந்த இடத்தில் விக்கிபீடியா தன்னை ஒரு வெளியீட்டாளராக வகைப்படுத்தாது, அதற்கு பதிலாக அது ஒரு தன்னார்வ அமைப்பில் (Volunteering system) செயல்படுவதாகவே கூறுகிறது. இதன்கீழ் பயனர்கள் பல்வேறு தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கி (Create), திருத்துகிறார்கள் (Edit) மற்றும் நிர்வகிக்கிறார்கள் (Manage).
தில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் விக்கிபீடியா தளத்தின் ஓப்பன் எடிட்டிங் சிஸ்டம் (Open Editing System) ஆனது "ஆபத்தானது" என்று கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஏஏன்ஐ செய்தி நிறுவனத்தை பற்றிய விக்கிபீடியா பக்கம் ஆனது, இது அரசாங்கத்தின் பிரசாரக் கருவி (Propaganda tool of the government) என்று குறிப்பிடுகிறது. இதுகுறித்த விவரிக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
விக்கிபீடியா தளத்தின் எடிட் அம்சத்தின் (Edit Feature) கட்டுப்பாடற்ற தன்மை, பொது நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பக்கங்களில் தீங்கு விளைவிக்கும் தகவல்களை சேர்க்க வழிவகுக்கும் என்று தில்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு ஒருபக்கம் இருக்க, ஏஎன்ஐ பக்கத்தில் கூறப்படும் திருத்தங்களை செய்த பயனர்களின் பெயர்களை விக்கிபீடியா வழங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த ஆன்லைன் என்சைக்ளோபீடியாவின் சட்டப் பிரதிநிதிகள் (Legal representatives), எடிட் செய்யும் அணுகல் (Edit access) உள்ள பயனர்கள் சரிபார்க்கக்கூடிய கன்டென்ட் (Verifiable content) மற்றும் சட்ட வழிகாட்டுதல்கள் (Legal guidelines) பற்றிய நிறுவப்பட்ட கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். அதாவது விக்கிபீடியா நிறுவனம், தன் பக்கத்தில் தவறு இருப்பதை பொத்தாம் பொதுவாக ஒப்புக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications