மணிக்கு 6792 கிமீ.. ருத்ர தாண்டவம் ஆடிய Rudram-II ஏவுகணை.. எதிரி நாடுகளை கப்சிப் ஆக்கிய DRDO விஞ்ஞானிகள்!
டிஆர்டிஓ (DRDO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research & Development Organisation) சத்தமின்றி நடத்திய ஒரு புதிய ஏவுகணை சோதனை (New Missile Test) வெற்றியின் முடிந்ததன் விளைவாக.. டிஆர்டிஓ-வை சேர்ந்த விஞ்ஞானிகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் எதிரி நாடுகளை 'கப்சிப்' என்று ஆக்கியுள்ளனர். அதென்ன சோதனை? எதிரி நாடுகளை கதிகளங்க வைக்கும்படி ருத்ரம்-II ஏவுகணை அமைப்பில் (RudraM-II Missile System) அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:
பிரஸ் இன்பர்மேஷன் பீரோ வழியாக கிடைத்த அறிக்கையின்படி, கடந்த மே 29, 2024 அன்று ஒடிசாவில் வைத்து, டிஆர்டிஓ-வின் புதிய ஏவுகணை ஆன ருத்ரம்-II மிஸைல் சிஸ்டம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, ருத்ரம்-II ஏவுகணையின் உந்துவிசை (propulsion), கட்டுப்பாடு (control) மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகள் (guidance systems) என எல்லாமே மிகச்சரியாக செயல்பட்டுள்ளது மற்றும் சோதனையின் அனைத்து இலக்குகளையும் அடைந்துள்ளது.

ஒரு கப்பல் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட எலக்ட்ரோ ஆப்டிகல் சிஸ்டம்ஸ் (Electro-optical systems), ரேடார் (Radar) மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் (Telemetry stations) போன்ற பல்வேறு கண்காணிப்பு கருவிகளின் (Tracking instruments) வழியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தி ருத்ரம்-II ஏவுகணையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது.
ருத்ரம்-II ஏவுகணையில் அப்படி என்ன ஸ்பெஷல்? ருத்ரம்-II ஏவுகணையின் இந்த வெற்றி இந்திய ஆயுதப் படைகளுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். ஏனென்றால், ருத்ரம்-II என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை அமைப்பாகும், இது திட எரிபொருளை பயன்படுத்துகிறது மற்றும் காற்றில் இருந்து ஏவப்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ருத்ரம் சீரீஸ் ஏவுகணைகள் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த ஆன்டி-ரேடியேஷன் ஏவுகணைகள் ஆனது எதிரிகளின் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை கண்டறிந்து, அவற்றில் இருந்து உமிழப்படும் ரேடியோ சிக்னல்களை கண்காணிப்பதன் மூலம் இந்திய நாட்டிற்கான அச்சுறுத்தல்களை திறம்பட தடுக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகள் ஆகும்.
அதாவது இந்த ஏவுகணையை மிகவும் உயரத்தில் இருந்து ஏவ முடியும். எதிரிகளின் ரேடியோ அலைவரிசைகள் மற்றும் ரேடார் சிக்னல்களை 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது ஒரு இன்டர்னல் கைடன்ஸ் சிஸ்டமையும் கொண்டுள்ளது, இது ஏவப்பட்ட பிறகு இலக்கை நோக்கி சரியாக செல்ல அனுமதிக்கிறது.
மேலும் இது லாக்-ஆன்-பிஃபோர்-லாஞ்ச் (Lock-On-Before-Launch) மற்றும் லாக்-ஆன்-ஆஃப்டர்-லாஞ்ச் (Lock-On-After-Launch) ஆகிய இரண்டு மோட்களிலும் செயல்படும். லாக்-ஆன்-பிஃபோர்-லாஞ்ச் (LOBL) என்பது ஏவுகணை ஏவப்படுவதற்கு முன்பு அதன் இலக்கை லாக் செய்து, அதற்கு ஒரு துல்லியமான நோக்கம் இருப்பதை உறுதிசெய்கிறது. லாக்-ஆன்-ஆஃப்டர்-லாஞ்ச் (LOAL) ஆனது ஏவுகணையை முதலில் ஏவவும், பின்னர் பறக்கும் போது அதன் இலக்கைக் கண்டுபிடித்து லாக் செய்யவும் அனுமதிக்கிறது
மேற்கண்ட திறன்களே எதிரி நாடுகளின் வயிற்றில் புளியை கரைக்கும் என்று நீங்கள் நினைத்தால்.. இனிமேல் தான் ருத்ரம்-II ஏவுகணையின் உண்மையான சிறப்பம்சத்தையே நாம் பார்க்கவுள்ளோம். அது என்னவென்றால். இந்த ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
மேலும் இது மாக் 5.5 வேகத்தில், அதாவது தோராயமாக மணிக்கு 6792 கிமீ வேகத்தில் பாயும் திறன் கொண்டது மற்றும் 200 கிலோகிராம் வரையிலான பேலோடை சுமந்து செல்லும் திறனையும் கொண்டுள்ளது. தற்போது வரையிலாக இந்தியாவின் சுகோய் போர் விமானங்களில் ரஷ்யாவின் கேஎச்-31 ஏவுகணைகள் தான் பொருத்தப்பட்டுள்ளன. அந்த ஏவுகணைகளானது புதிய ருத்ரம்-II ஏவுகணைகளால் விரைவில் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications