வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் அறிமுகமானது புதிய அம்சங்கள்.. பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் அனைத்து முக்கிய சேவைகளும் தற்போது கிடைக்கிறது. எனவே தான் இந்தியாவிலும் பல கோடி மக்கள் இந்த வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் புதிய வாட்ஸ்அப் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால் செய்வதைபோல, இனி வாட்ஸ்அப் வெப்பிலும் வீடியோகால் செய்ய முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் ஆடியோ மற்றும் க்ரூப் வீடியோ கால்களை வெப் பிரவுசரில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும்.

இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்குத் தனியாக டெஸ்க்டாப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியாம் இருக்காது. மேலும் பயனர்களுக்கு ஸ்கிரீன் ஷேரிங், எமோஜி ரியாக்ஷன், பிரத்யேக Calls Tab, கால் ஹிஸ்டரி மற்றும் காண்டாக்ட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் இணைய (Web) பதிப்பில் மேற்கொள்ளப்படும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளும் முழுமையான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்புடன் செயல்படும் என்று வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும்,இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், அனைத்து பயனர்களுக்கும் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் அழைப்புகளுக்காக வழங்கி உள்ள புதிய அப்டேட்டில், வழக்கமான கால் அம்சங்களுடன் கால் டிரான்ஸ்ஃபர், வெயிட்டிங் ரூம், குயிக் ஹெச்.டி., நாய்ஸ் சப்ரெஷன் உள்ளிட்ட பல மேம்பட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பயனர்கள் மேலும் தரமான மற்றும் சிரமமற்ற அழைப்பு அனுபவத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் டிரான்ஸ்ஃபர் வசதியின் மூலம், பயனர்களுக்கு வரும் அழைப்பை துண்டிக்காமல் நேரடியாக செயல்பாட்டில் இருக்கும் குழு (Group) அழைப்பில் இணைய முடியும். மேலும், ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் தொடங்கிய குரல் அல்லது வீடியோ அழைப்பை, வாட்ஸ்அப் வெப்பில் எளிதாக மாற்றி, எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தும் வசதியும் இந்த அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது.
வெயிட்டிங் ரூம் (Waiting Room) வசதி மூலம், குழு அழைப்புகளில் சேரும் பயனர்களை நிர்வகிக்கும் கூடுதல் கட்டுப்பாடு வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் கால் லிங்கை உருவாக்கும் போது, பயனர்கள் "Require approval to join" என்ற விருப்பத்தை செயல்படுத்தலாம். இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், அழைப்பில் இணைய விரும்புபவர்கள் முதலில் வெயிட்டிங் ரூமில் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, அழைப்பை நடத்துபவர் அனுமதி வழங்கிய பின்னரே அவர்கள் குழு அழைப்பில் இணைய முடியும்.
குயிக் ஹெச்.டி. (Quick HD) அம்சம் மூலம், அழைப்பு தொடங்கிய சில நொடிகளிலேயே உயர்தர (HD) வீடியோ தரம் தானாகவே செயல்படுத்தப்படும். இதனால், பயனர்கள் தொடக்கத்திலிருந்தே தெளிவான வீடியோ அழைப்பு அனுபவத்தைப் பெற முடியும்.

அதேபோல், நாய்ஸ் சப்ரெஷன் வசதி அழைப்புகளின் போது பின்னணியில் ஏற்படும் தேவையற்ற இரைச்சல் மற்றும் சத்தங்களைக் குறைத்து, குரல் தெளிவை மேம்படுத்துகிறது. இந்த அம்சத்தை அழைப்பு நடைபெறும் போதே இன்-கால் (In-call) செட்டிங்ஸ் மூலம் பயனர்கள் விருப்பப்படி எந்த நேரத்திலும் இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும்.
தற்போது வாட்ஸ்அப்பில் வந்துள்ள இந்த புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் உலகம் முழுவதும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் இன்னும் பல அசத்தலான அம்சங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications