5ஜி நெட்வொர்க் கெடு முடிந்தது.. பேக்-அடித்த வோடபோன் ஐடியா.. தொலை தொடர்புத்துறைக்கு சைலன்ட்டாக கடிதம்!
இந்த வருடம் 5ஜி சேவை வந்துவிடும் என்று வோடபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்கள் கொக்குபோல காத்திருக்கும் வேளையில், அந்த நிறுவனம் மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இதில் ஜியோவும், ஏர்டெல்லும் 4ஜி சேவைக்குப் பின் 5ஜி சேவையை போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் 5ஜி சேவை பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது.

இந்தாண்டு இறுதிக்குள் 80 சதவீத நகரங்களில் 5ஜி சேவையை கொண்டு சேர்க்கும் அளவுக்கு அந்த நிறுவனங்களின் வேகம் இருக்கிறது. ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம், ஒரு நகரத்தில் கூட 5ஜி சேவையை வழங்கவில்லை. இருப்பினும், டெல்லி மற்றும் புனேவில் 5ஜி சேவைக்கான பணிகளை ஆண்டுக்கணக்கில் செய்து வருகிறது. ஆனால், சோதனை முறையில் கூட 5ஜி சேவை பயன்படுத்தப்படவில்லை.
சொல்லப்போனால், 5ஜி அலைக்கற்றை ஏலத்தின்போது, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசிடம் அந்த சேவையை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மதாம் 16ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், அந்த தேதி நெருங்கியும் வோடபோன் நிறுவனம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இப்போது, தேதி முடிந்த நேரத்தில் மத்திய தொலைத் தொடர்பு செயலாளர் கே. ராஜாராமனுக்கு கடிதம் அனுப்பி இக்கிறது.
அந்த கடித்ததில், தங்களது நிறுவனம் பொருளாதார சிக்கலில் தவித்து வருவதால், 5ஜி சேவையை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் சேவை வழங்க வேண்டும். இல்லையென்றால், அது காலாவதியாகிவிடும். ஆகவே, மத்திய தொலைத்தொடர்புத் துறை அந்த நிறுவனத்தின் கோரிக்கை குறித்த தனது முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.
இருப்பினும், அதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளர் கே. ராஜாராமன் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க எங்களுக்கு கோரிக்கை வந்துள்ளது. இந்த கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும். அதன்பின்பே காலஅவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியும்" எனத் தெரிவித்தார்.
ஆகவே, வோடபோன் ஐடியா நிறுவனம், 2023ஆம் ஆண்டில் 5ஜி சேவையை வழங்காது என்பதும், இத்தாண்டுக்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் கூட 5ஜி சேவை வந்தாலும், அது டெல்லி, மும்பை, மற்றும் புனே ஆகிய முக்கிய நகரங்களில் மட்டும் கிடைக்கும் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், ஜியோ நிறுவனமானது, 1 லட்சம் 5ஜி டவர்களை அமைக்கும் பணியினை கிட்டத்தட்ட முடித்து விட்டது. அதில் 90 சதவீதம் டவர்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல ஏர்டெல் நிறுவனமும் 25 ஆயிரத்துக்கும் மேலான 5ஜி டவர்கள் மூலம் சேவையை வழங்க தொடங்கிவிட்டது.
ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம் டெல்லி மற்றும் புனே நகரங்களில் 36 டவர்களை மட்டுமே நிறுவியிருக்கிறது. மற்ற நகரங்களுக்கான 5ஜி டவர் உபகரணங்களை கூட வோடபோன் இன்றும் வாங்கவில்லை. பொருளாதார சிக்கலுக்கு பின்பே அதற்கான பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி பார்த்தால், வோடபோன் நிறுவனம் 5ஜி சேவையை வழங்க பல ஆண்டுகள் பிடிக்கும்.
இதனால், வோடபோன் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








