Vodafone பயனர்களுக்கு 5G ட்ரீட் ரெடியாகிடுச்சு.. அடுத்த மாசம் எல்லாம் மாறும்!
ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை கொண்டாடிவரும் நிலையில், வோடாபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்கள் "எப்ப வரப்போற '5G' எப்ப வரப்போற" என்று காத்திருந்தனர். இப்போது அவர்களுக்கு அதிரடியான அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்த 5ஜி சேவை எப்போது வழங்கப்படும் என்ற விவரம் இதோ.
இந்தியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் (Telecom) நிறுவனங்களும் 5ஜி சேவையை நாட்டின் பெரும்பாலான நகரங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றன. ஆனால், இவற்றின் போட்டி நிறுவனமான வோடாபோன் ஐடியா இன்னும் 5ஜி சேவையை வழங்கவில்லை.

முக்கியமான நகரங்களில் மட்டுமாவது 5ஜி சேவையை வழங்குமாறு, அதன் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கவே தொடங்கி விட்டனர். இருப்பினும், வோடாபோன் ஐடியா நிறுவனம் செவிசாய்க்கவில்லை. இதன் விளைவாக வோடாபோன் ஐடியா பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைய தொடங்கியது. வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.
சொல்லப்போனால், கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த மாதம் வரையில் மட்டும் வோடாபோன் ஐடியா நிறுவனம் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக வோடாபோன் ஐடியா நிறுவனம் போஸ்ட்பெய்ட் (Postpaid) மற்றும் ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களில் பல்வேறு சலுகைகளையும், புதுப்புது பிளான்களையும் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்திவந்தது.
இப்படிப்பட்ட சூழலில் வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. மத்திய தொலைத் தொடர்புத் துறையின் (DoT) மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதாவது, நாட்டில் 5ஜி சேவையை வழங்குவதற்கான நிதியை வோடாபோன் ஐடியா நிறுவனம் திரட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வங்கிகள் உதவி உடன் நிதியை திரட்ட முடிவு செய்த வோடாபோன் ஐடியா நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவந்தது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்த மாதம் பேச்சுவார்த்தை முடிந்து நிதி பிரச்சனை முடிவுக்கு வந்தவிட வாய்ப்புள்ளது. அந்த மாதத்திலேயே 5ஜி சேவை குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
சொல்லப்போனால், மூன்றாம் காலாண்டிற்கான உரிமக் கட்டணத்தை வோடாபோன் ஐடியா நிறுவனம் செலுத்திவிட்டது. அதேபோல நான்காம் காலாண்டிற்கான பாதிக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவலை அறிந்த வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களைப்போல, வோடாபோன் ஐடியாவும் முதலில் சில வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைக்கான கட்டணத்துடன் இலவச 5ஜி சேவையை வழங்க வாய்ப்புள்ளது. அதன்பின் 5ஜி சேவைக்கான பிளான்கள், எந்த நகரங்களில் சேவை முதலில் தொடங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்த அப்டேட்களாக வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








