இனிமே இப்படிதான்- களமிறங்கும் Vi: புதிய அவதாரம் எடுக்கும் வோடபோன் ஐடியா!
வீ என்ற பெயரில் புது பிராண்டாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார். விஐஎல் (வோடபோன் ஐடியா லிமிட்டெட்) என செயல்பட்ட வந்த நிலையில் புதிய பிராண்டாக அந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார்
ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை செயல்அதிகாரி ரவீந்தர் தக்கர் மெய்நிகர்தளம் மூலம் வெளியிட்டார். அதில் வீ.,vi என்ற புதிய பிராண்ட்டை அறிவித்தார். இது we என்ற உச்சரிப்போடு அழைக்கப்படுகிறது.

இரண்டு பிராண்டுகளின் இணைப்பு
இதுகுறித்து ரவீந்தர் தக்கர் கூறியதாவது, இரண்டு பிராண்டுகளின் இணைப்பு உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பின் உச்சம் எனவும் எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டுச் செல்லும் ஒரு பிராண்ட் இது எனவும் குறிப்பிட்டார். இரண்டு பிராண்டுகள் ஒருங்கிணைப்பிற்கு பிறகு புதிய தொடக்கத்திற்கான நேரமாக இது இருக்கும் எனவும் டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை வழங்குவதில் வீ கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு நிறுவனமான வீ வாரியம்
பிரிட்டனின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஐடியா செல்லுலார் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு நிறுவனமான வீ வாரியம் பங்கு மற்றும் கடன் கருவிகளின் மூலம் ரூ.25,000 கோடி நிதித் திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஏஜிஆர் நிலுவைத் தொகையில் 10 சதவீதத்தையும், அடுத்த நிதியாண்டு தொடங்கி 10 தவணைகளாக மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில நாட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்பை சந்தித்த நிறுவனம்
வோடபோன் ஐடியா இணைக்கப்பட்ட நாளில் இருந்து நுகர்வோர் எண்ணிக்கையில் பெரும் சரிவை சந்தித்தது. இணைப்பின் போது சுமார் 408 மில்லியன் பயனர்களாக இருந்த நிலையில் ஜூன் 2020 இறுதிக் கணக்குப்படி சுமார் 208 மில்லியன் பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது. பெரும் இழப்பை சந்தித்து வரும் வோடபோன் சுமார் ரூ. 50,000 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான முயற்சியாகவே இந்த நிதித்திரட்டல் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

வருடாந்திர பொதுக்கூட்டம்
செப்டம்பர் 30,2020 ஆம் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஏடிஆர், ஜிடிஆர், எஃப்சிசிபி, கடன் பத்திரங்கள் உள்ளிட்டவைகள் மூலமாக நிதி திரட்டுவதற்கு நிறுவனம் பரிசீலுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி
தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் ஜியோ அறிமுகமான குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு இணையாக வோடபோன் ஐடியாவும் டபுள் டேட்டா சலுகை, ஜீ5 சந்தா, வோடபோன் ப்ளே போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications