அடுத்த AIRCEL? கவர்மென்ட் கையில் Vodafone Idea கம்பெனி.. தலைக்கு மேல் வெள்ளம்.. கோரிக்கை மேல் கோரிக்கை!
முதலில் ஏர்செல் (AIRCEL) நிறுவனம் எப்படி வீழ்ந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கடுமையான போட்டி, நீடித்த கடன், தோல்வியடைந்த ஸ்பெக்ட்ரம் பகிர்வு ஒப்பந்தங்கள், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் ஆகியவற்றின் காரணமாக ஏர்செல் நிறுவனம் இந்தியாவில் தோல்வியடைந்தது. மேலும் நிலுவை தொகையை செலுத்த இயலாமை மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுடன் அதன் திட்டமிடப்பட்ட இணைப்பு தோல்வி உள்ளிட்ட நிதி சிக்கல்களையும் ஏர்செல் எதிர்கொண்டது.
இப்படித்தான் வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. இப்போது நிலைமை எங்கு வந்து நிற்கிறது என்றால் - வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் ஆனது இந்திய அரசாங்கத்தில் கையில் தான் இருக்கிறது!

வி நிறுவனமானது அதன் தோள்களில் உள்ள கடன் சுமை காரணமாக சிரமப்பட்டு வருகிறது. இந்த கடன், பெரும்பாலும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue - AGR) பாக்கிகளை உள்ளடக்கியது. டெலிகாம்டால்க் அறிக்கையின்படி இது ரூ.80,000 கோடிக்கு மேல் செல்கிறது.
இப்போதைக்கு வி நிறுவனத்தின் இந்த சிக்கலை தீர்க்கக்கூடிய ஓரே "ஆபத்பாண்டவன்" இந்திய அரசாங்கம் மட்டுமே. மேலும் வோடாபோன் ஐடியாவானது கடனை குறைப்பதோ அல்லது அதை நீக்குவதோ கோரிக்கை வைக்கவில்லை, மாறாக அதன் வணிகத்திற்கு சாத்தியமான வகையில் அதை மறுசீரமைப்பதே முதன்மையான கோரிக்கையாக உள்ளது
முன்னதாக இந்நிறுவனத்திற்கு உதவுவதற்காக, அரசாங்கம் ஒரு ஒத்திவைப்பை (Deferral) அறிவித்திருந்தது, ஆனால் இப்போது அது நடக்க வாய்ப்பில்லை. வோடபோன் ஐடியாவானது சந்தையில் இருந்து புதிய கடனை திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், ஏஜிஆர் பாக்கி செலுத்துதல்கள் குறித்து தெளிவு இல்லாததால், இதற்கு கடன் வழங்கும் அளவிற்கு மார்க்கெட்டில் போதுமான நம்பிக்கை நிலவவில்லை.
ஆக இந்நிறுவனம் அதன் ஏஜிஆர் பாக்கிகளுக்கு "ஒரு முடிவு" கட்டாத வரை, சந்தையில் இருந்து நிதி திரட்டுவது கடினமாக இருக்கும். வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குகளை வாங்க ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆர்வமாக இருப்பதாகவும் சில வதந்திகள் பரவின. ஆனால் இப்போது வரையிலாக அப்படி எதுவும் நடக்கவில்லை அல்லது அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இப்படியாக வோடபோன் ஐடியாவின் 100% எதிர்காலம் அரசாங்கத்தின் கையில் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் இது இந்திய அரசாங்கத்தையே சார்ந்துள்ளது. ஏனென்றால் இப்போதைக்கு வி நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பது இந்திய அரசாங்கம் தான். ஆக இந்நிறுவனம் நலிவடைவதை அரசாங்கமும் விரும்பாது.
இந்திய அரசாங்கம் வி நிறுவனத்தின் ஏஜிஆர் நிலுவை தொகையை தீர்த்து வைக்க முடிந்தால், அது வி நிறுவனத்திற்கு கிடைக்கும் நிதிகளுக்கான கதவுகளை திறக்கக்கூடும். மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் பங்கு முதலீட்டாளர்களை பெறவும் அனுமதிக்கும். சமீபத்தில் 2016-17 தொடர்பான ஏஜிஆர் நிலுவை தொகையை கேட்கும் முடிவை இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரூ.250 விலை உயர்வு: சமீபத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனமானது வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்சலுகைகளை வழங்கும் அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றின் விலையை அதிகரித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1999) ஆகும். தற்போது இது கூடுதல் சலுகைகளுடன் ரூ.2,249 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது (அல்லது) திருத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய அல்லது விலை உயர்த்தப்பட்ட ரூ.2,249 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 30 ஜிபி அல்லது 40 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








