Jio 5ஜி சேவைக்கு ஆப்பா.? அம்பானியின் மாஸ்டர் பிளானை போட்டுடைத்த Vodafone Idea.. டிராய்க்கு பறந்த கம்ப்ளைன்ட்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் (Telecom) நிறுவனங்களும் 5ஜி சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக வோடபோன் ஐடியா (Vodafone Idea) குற்றம் சாட்டியுள்ளது.
எப்படி 5ஜி சேவையை இலவசமாக வழங்குகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் (Telecom Regulatory Authority of India) முறையிட்டு புகாரும் அளித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன.

முதல்கட்டமாக முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த சேவைகள் 4ஜி கட்டணத்தை விட மலிவான விலையில் வழங்கப்படுகிறது. அதிலும், ஜியோ நிறுவனம் அன்லிமிடெட் (Unlimited) 5ஜி சேவையை பல சந்தாதாரர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த யுக்தியை பார்தி ஏர்டெல்லும் கையில் எடுத்திருந்தது. இந்த நேரத்தில் நம்மிடையே எப்படி 5ஜி சேவையை மலிவாக வழங்க முடியும் என்ற கேள்வி எழலாம். முதலில் இலவசமா கொடுத்துவிட்டு அப்புறம் கட்டணத்தை உயர்ந்துவார்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.
ஆனால், 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவைக்கான பணத்தை ஜியோவும், ஏர்டெல்லும் வசூலிக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போல வோடபோன் நிறுவனமும் 5ஜி சேவைக்கான ஏலத்தில் கலந்துகொண்டு சில பேண்ட்களை (Band) எடுத்துள்ளது. ஆனால், வோடபோன் சந்தாதாரர்களுக்கு இன்னும் 5ஜி சேவை வழங்கப்படவில்லை.
விரைவில் தங்களது சந்தாதாரர்களுக்கு 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் அதற்கான உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் மீது புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் தனது போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் 5ஜி சேவை என்ற பெயரில் சந்தாதாரர்களை ஏமாற்றி வருகிறது என்றும் இந்தியாவில் 5ஜி சேவையை இலவசமாக வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அதோடு இது டெலிகாம் சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி 2 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பதிலளிக்கும்படி டிராய் (TRAI) நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இரண்டு நிறுவனங்களும் வோடபோன் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. அதோடு எங்கள் சந்தாதாரர்களுக்கு 5ஜி சேவையை இலவசமாக வழங்கவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 4ஜி சேவையின் ஒரு பகுதியாகவே 5ஜி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் 4ஜி பயனாளர்கள் உடன் ஒப்பிடுகையில் 5ஜி பயனாளர்கள் மிகக்குறைவு, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஏமாற்றும் திட்டம் என்று கூறமுடியாது. சொல்லப்போனால், 1 ஜிபி (1 GB) 5ஜி டேட்டாவுக்கான கட்டணமானது 1 ஜிபி 4ஜி டேட்டாவுக்கான செலவை விட குறைவேயாகும் என்று பதிலளித்துள்ளன.
இந்த விவகாரத்தை தொடர்ந்து 5ஜி சேவைக்கான கட்டணத்தை டெலிகாம் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண விவரங்களை ஜியோ, ஏர்டெல் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. 4ஜி கட்டணத்துக்கு நிகராகவோ அல்லது சில ரூபாய்கள் அதிகமாகவோ நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications