எப்போது அமல்? அவரே சொல்லிட்டாரு.. Vodafone Idea ரீசார்ஜ் விலை உயர்வு குறித்து முக்கிய தகவல்!
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் சிஇஓ, ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதென்ன தகவல்? எப்போது விலை உயர்வு அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:
சிஓஏஐ டிஜிகாம் உச்சி மாநாடு 2026-ன் ஒரு நிகழ்ச்சியின் இடையே பேசிய வோடபோன் ஐடியா தலைமை செயல் அதிகாரி ஆன அபிஜித் கிஷோர், "சிறு திருத்தங்கள் இருக்கும், ஆனால் நீங்கள் வழக்கமாக பார்ப்பது போல் கட்டமைப்பு ரீதியான கட்டண உயர்வு இருக்காது. தற்போதைய சந்தை நிலவரங்களால் சிறிய கட்டண திருத்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன," என்று கூறியுள்ளார்.

அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் தனது தற்போதைய மொபைல் கட்டணங்களில் சிறிய திருத்தங்களை அறிமுகப்படுத்தக்கூடும். ஆனால் விரிவான கட்டண உயர்வை உடனே அமலுக்கு கொண்டுவரும் திட்டங்கள் எதுவும் அந்நிறுவனத்திடம் இல்லை. பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் விலைகளை சுமார் 4-5 சதவீதம் உயர்த்திய சில நாட்களிலேயே வி நிறுவனத்திடம் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் முழுவதும் கிட்டத்தட்ட 15 சதவீத பரந்த அளவிலான கட்டண உயர்வை எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கிடைக்கும் அரசின் தொடர்ச்சியான ஆதரவை பற்றியும் கிஷோர் பேசியுள்ளார். மேலும் அரசின் கணிசமான பங்கு மூலதனத்தையும் குறிப்பிட்டார்.
"அரசு 49 சதவீத பங்குதாரராக உள்ளது, அதை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். நாங்கள் செய்ய வேண்டியதை நோக்கியே செயல்பட்டு வருகிறோம், அது அடிப்படையில் செயல்திறனை மேம்படுத்துவதாகும், அதைத்தான் நீங்கள் சந்தாதாரர் முன்னெடுப்பில் காண்கிறீர்கள். இது குறித்து நாங்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முன்பே அறிக்கை அளித்திருந்தோம், அது பொதுவெளியில் உள்ளது" என்று கூறியுள்ளார். ஆனால் வி நிறுவனம் சந்திக்கும் சந்தாதாரர் இழப்புகள் தொடர்கின்றன என்பதே கசப்பான உண்மை!
டிராய் என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, எம்2எம் இணைப்புகளை தவிர்த்து, வி நிறுவனம் மார்ச் 2026 இல் சுமார் 0.157 மில்லியன் (தோராயமாக 0.16 மில்லியன்) நுகர்வோர் சிம் இணைப்புகளையும், அதே பிரிவில் பிப்ரவரி 2026 இல் சுமார் 0.49 மில்லியன் பயனர்களையும் இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மிகவும் அமைதியாக ஒரு சிறிய அளவிலான கட்டண உயர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விலை உயர்வு - ஒவ்வொரு சில வாரங்களுக்கும் மற்றும் மாதங்களுக்கும் ஒருமுறை நிகழ்ந்து வருகிறது.
சேவைகளில் தங்கள் லாப வரம்புகளை மேம்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த திட்டங்களையும் மாற்றியமைப்பதை (வேலிடிட்டி குறைப்பு, நன்மைகள் குறைப்பு) பார்க்க முடிகிறது.
மிகவும் சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் ரூ.799 மற்றும் ரூ.859 திட்டங்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் ரூ.899 திட்டத்தை மட்டுமே வழங்கி, பயனர்களுக்கான ரூ.40 கட்டண விலை உயர்வை அமல்படுத்தி இருந்தது. இது ஒரு அமைதியான - மொபைல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வாகும்; இது பெரிய உயர்வாக இல்லாவிட்டாலும், பயனர்கள் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக உள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் கூட சமீபத்தில் தனது ரூ.195 டேட்டா வவுச்சரின் செல்லுபடியாகும் கால அளவில் ஒரு மாற்றத்தை செய்தது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.195 டேட்டா வவுச்சர், முன்பு இருந்த 90 நாட்களுக்கு பதிலாக, இப்போது 30 நாட்கள் என்ற தனிப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. இதில் டேட்டா மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான செலவில் இது ஒரு குறிப்பிடத்தக்க விலை உயர்வை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications