Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!
புது ஸ்மார்ட்போன் வாங்குறோமோ இல்லையோ.. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எல்லா போன்கள் மீதும் "ஒரு கண் வைப்பது" எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் தான்.
ஏனெனில், யாராவது எந்த போன் வாங்கலாம் கேட்டால், அவர்களுக்கு சில நல்ல பரிந்துரைகளை வழங்கலாம் அல்லது ஒருவேளை நீங்களே ஒரு புது மாடல் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் யாரிடமும் எந்த பரிந்துரைகளையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.
இந்த அடிப்படையின் கீழ், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒரு விவோ ஸ்மார்ட்போன் குறித்து நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அது Vivo T1x ஆகும்.

Vivo T1x "வெயிட்டான" ஸ்மார்ட்போனாக வரும்!
இந்தியாவில் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக Vivo T1X விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது 5ஜி ஸ்மார்ட்போனாக வருமா? அல்லது 4ஜி மாடலாக வருமா? என்பதை விவோ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதன் மேல் ஏன் ஒரு கண் வைக்க வேண்டும்?
ஏனெனில் இது ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.58-இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, MediaTek Dimensity 900 SoC, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற சில தரமான அம்சங்களை பேக் செய்கிறது.
இது ஏற்கனவே 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களின் கீழ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து பெரிய அளவிலான குழப்பங்கள் இல்லை.
விவோ டி1எக்ஸ் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கலாம் என்பதை பற்றி பார்க்கும் முன், இது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்பதை பற்றி பார்த்துவிடலாம்.

5ஜி வேரியண்ட்டின் அம்சங்கள்?
இது ஃபுல்-எச்டி+ (1,080x2,408 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.58-இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
மேலும் இது மீடியாடெக் Dimensity 900 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

கேமரா செட்டப் எப்படி?
கேமராக்களை பொறுத்தவரை, இது 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறுகிறது. முன்பக்கத்தில், 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளை கொண்டுள்ளது.

4ஜி வேரியண்ட்டின் அம்சங்கள்?
மறுகையில் உள்ள Vivo T1x 4G ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை வழங்குகிறது.

விவோ T1x ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை?
அதிகாரப்பூர்வமான இந்திய விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை; ஆனால் சீன மற்றும் மலேசிய விலை விவரங்கள் நம்மிடம் உள்ளன. அதன்படி:
Vivo T1x 5G ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.20,100 க்கும், அதன் 8GB + 128GB வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.21,300 க்கும் மற்றும் 8GB + 256GB விருப்பமானது தோராயமாக ரூ.23,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள 4G மாடல் ஆனது 4GB + 64GB மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.11,600 க்கும் மற்றும் ரூ14,300 க்கும் (தோராயமாக) அறிமுகமானது.

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?
Vivo India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் படி, விவோ T1x ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் சரியான தேதி குறித்த விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
மேலும், முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5G மாடல் வெளியாகுமா? அல்லது 4G மாடல் அறிமுகம் செய்யப்படுமா? என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. அதுகுறித்த தகவல் கிடைக்கும் போது அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
Photo Courtesy: Vivo


Click it and Unblock the Notifications








