விண்வெளி சுற்றுலா தொடக்கம்! சாதாரண மக்கள் செல்ல முடியுமா? எத்தனை கோடிகள் வேண்டும்?
விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic ) என்னும் விண்வெளி சுற்றுலா நிறுவனம், அதனுடைய கேலக்டிக் 01 (Galactic 01) விமானம் மூலம் முதல் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இனிமேல் பணம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், விண்வெளி சுற்றுலா செல்ல முடியும்.
இதுபோன்று சுற்றுலா சென்றால், அதிகபட்சமாக 2 மணி நேரத்தை மட்டுமே விண்வெளியில் செலவிட முடியும். அந்த நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்நாளில் பார்க்க முடியாத, பூமியின் பிரத்யேக அழகை கண்டுகளிக்கலாம். ஆனால், இந்த 2 மணி நேரத்துக்கே மூக்கில் விரல் வைக்கும்படியாக டிக்கெட் விலை இருக்கும்.

இந்த பயணத்தை சாதாரண மக்கள் மேற்கொள்ள முடியுமா? ஒருமுறை விண்வெளி சுற்றுலா சென்றுவந்தால் எவ்வளவு செலவாகும்? வருங்காலத்தில் இது மிகப்பெரிய தொழிலாக மாறுமா? உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் படிப்பு, வேலை, குடும்பம் என்று அடுத்தடுத்து ஓய்வே இல்லாமல், ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதனிடையே, ஏதாவது ஒரு நேரத்தில் பெரும்பாலானோருக்கு மீதமுள்ள வாழ்க்கையை சுற்றுலா சென்று கழிக்க வேண்டும் என்று தோன்றிருக்க வாய்ப்புள்ளது. ஏன், சில இடங்களுக்கு போக வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசைப்படிருக்கலாம். அதிகபட்சம், வேறு நாடுகள் வரையில் அந்த ஆசைகள் இருக்கும்.
ஆனால், ஒரு சிலருக்கே மட்டுமே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற இமாலய ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன், கதவை திறந்துவிட்டிருக்கிறார். இந்த ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமாக விர்ஜின் கேலக்டிக் என்னும் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் மூலம், வணிக ரீதியிலான விண்வெளி பயணத்துக்கான விமானங்கள் தயாரிப்பில் அவர் ஈடுப்பட்டு வருகிறார். 2021ஆம் ஆண்டில், தன்னுடைய தனிப்பட்ட விமானமான 'யூனிட்டி' மூலம் விண்வெளிக்கு பயணம் செய்திருந்தார். அதன்பின், விண்வெளி சுற்றுலாவை தொடங்க இருப்பதாவும், அதற்கான டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்தார்.
இதுவரையில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் விண்வெளி சுற்றுாலாவுக்கு முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கேலக்டிக் 01 (Galactic 01) விமானம் மூலம் 2 விமானிகள், இத்தாலியை சேர்ந்த 4 விஞ்ஞானிகள் என்று 6 பேர் கொண்ட குழு உடன் ரிச்சர்ட் பிரான்சன் சோதனை முறை சுற்றுலாவுக்கு நேற்று (ஜூன் 29) விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்.
கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் இந்த பயணம் நீடித்தது. அதில், 70 நிமிடங்கள் அந்த குழு விண்வெளியில் நேரத்தை செலவழித்துள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட விண்வெளி பயணம் வரும் ஆகஸ்ட் மாதம் கேலக்டிக் 02 (Galactic 02) விமானம் மூலம் நடக்கவிருப்பதாக ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார். அதில், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த கோடீஸ்வரர்கள் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளி சுற்றுலாவுக்கு எவ்வளவு செலவாகும்? விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மூலம் விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பினால், ஒரு டிக்கெட்டுக்கு 4,50,000 டாலர்கள் செலுத்த வேண்டும். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.7 கோடியாகும். வெறும் 2 மணி நேர பயணத்துக்கு இவ்வளவு பெரும் தொகையை யாராவது கொடுப்பார்களா? என்று சாதாரண மக்களுக்கு தோன்ற வாய்ப்புள்ளது.
ஆனால், அந்தத் தொகையை கொடுத்து பல முறை விண்வெளிக்கு சென்றுவர ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள் பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன்? வருங்காலத்தில் விண்வெளியில் திருமணம், விண்வெளியில் நிச்சயதார்த்தம் கூட நடத்த தொகைகள் நிர்ணயிக்கப்படலாம். இப்படி, இந்த விண்வெளி சுற்றுலா கோடீஸ்வரர்களுக்கான பொழுதுபோக்காக மாறலாம். அதுதொடர்பான தொழில்களும் வளரும்.


Click it and Unblock the Notifications