வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்.. பேரழிவுக்கு முன் மக்களுக்கு வந்த கூகுள் எச்சரிக்கை.. எப்படி சாத்தியம்?
கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுத்துவதற்கு முன்பு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
அதாவது வெனிசுலாவில் நேற்று முன்தினம் மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சில நொடிகள் இடைவெளியில் நிகழ்ந்த இந்த இரட்டை நிலநடுக்கத்தால் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழும் காட்சிகளும், உயிர் பிழைக்க மக்கள் அலறியடித்தபடி கடைசி நொடியில் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் பதற்றமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல் நிலநடுக்கம் மாலை 6.04 மணிக்கு ஏற்பட்டதற்கு சில விநாடிகள் முன்பாகவே தங்களது ஆண்ட்ராய்டு செல்போன்களில் கூகுள் நிறுவனத்திடமிருந்து நிலநடுக்க எச்சரிக்கை அறிவிப்பு வந்ததாக உயிர்தப்பிய பலர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த முன்கூட்டிய எச்சரிக்கையால் பலர் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறி தங்களது உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பி-அலைகள் மற்றும் எஸ்-அலைகள்
பொதுவாக நிலநடுக்கத்தின்போது முதலில் உருவாகும் முதன்மை அலைகள் (பி-அலைகள்) மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டாம் நிலை அலைகள் (எஸ்-அலைகள்) தனித்தனியாக பயணிக்கின்றன. விநாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் பி-அலைகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் பி-அலைகளைத் தொடர்ந்து வரும் எஸ்-அலைகளே நிலத்தின் மேற்பரப்பை அதிகமாக அதிரச் செய்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் உள்ளிட்ட பெரும்பாலான அழிவுகளுக்கு காரணமாகின்றன.
அதுவும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் அக்ஸிலரோமீட்டர் என்ற மிக முக்கிய சென்சார் இருக்கும். இதன் மூலம் மிகச்சிறிய அளவிலான அதிர்வுகளையும் துல்லியமாக உணர முடியும். இந்த சென்சார் நிலநடுக்கம் ஏற்படும் போது உருவாகும் ஆரம்பக்கட்ட அதிர்வுகளைக் கண்டறிந்து அந்த சிக்னலை அது பதிவான இடத்தின் விவரத்துடன் கூகுளின் ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பிற்கு அனுப்புகிறது.

மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு மொபைலில் இருந்து அதிர்வு சிக்னல் வந்தவுடன், கூகுளின் சர்வர்கள் அந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆண்ட்ராய்டு போன்களையும் ஆராய்ந்து அதேபோல அதிர்வு சிக்னல்கள் அந்த பகுதியில் வருகிறதா என கண்காணிக்கும். அப்படி நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் இருந்து சிக்னல்கள் வந்தால் கூகுள் சர்வர்கள் உடனே அதைக் கண்டறிந்து அந்த பகுதி மக்களுக்கு அலர்ட் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வெனிசுலா அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் Christopher Landau சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
Image Source : Pixabay+IANS, indiatvnews


Click it and Unblock the Notifications