Google Maps பார்த்து லாரி ஓட்டுனா இப்படி தான் நடக்கும்! என்ன ஆச்சு தெரியுமா?
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். ஆனால் இந்த செயலியை ஒரு சில இடங்களில் போகும் போது மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூரில் (Jaipur) இருந்து டவுசாவுக்கு 10 சக்கரங்களை கொண்ட பெரிய லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் சரியான வழி தெரியாததால் கூகுள் மேப் உதவியுடன் சென்றார். குறிப்பாக அவர் ஆழ்வார் (Alwar) பகுதியில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேறு பாதையை கூகுள் மேப் காட்டியதால், அங்குள்ள ஒரு மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது.

அதுவும் குறுகலான பாதை கொண்ட அந்த மார்க்கெட்டில் சிக்கியதோடு, லாரி மோதியதால் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கடைகள், வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் கூகுள் மேப்பை நம்பி தவறான வழியில் வந்ததை அறிந்து லாரி டிரைவர், அங்கிருந்து ஓடி விட்டார்.
அதேபோல் மார்க்கெட்டில் புகுந்த லாரியால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்த வியாபாரிகள் அளித்த தகவலின்படி, அதிகாரிகளும், போலீசாரும் வந்து, கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்தினர். எழு மணி நேரம் நீடித்த களேபரத்துக்கு பின்பு பரபரப்பான துங்கா மார்க்கெட் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கூகுள் மேப் பார்த்து லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் கடந்த மாதம் கூட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று கூகுள் மேப்ஸ் தவறான வழிகாட்டுதலால் வழி தவறி வேறு ஒரு இடத்துக்குச் சென்று, அப்பகுதி மக்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் நடந்தது.
கடந்த மாதம் அஸ்ஸாமின் 16 பேர் கொண்ட போலீஸ் குழு குற்றவாளியைத் தேடிப் புறப்பட்டது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வழிகாட்டுதலின்படி சென்று கொண்டிருந்த போலீஸ் குழு, அஸ்ஸாமில் இருப்பதாக மேப்பில் காட்டிய தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தது. ஆனால் அது நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆயுதங்களுடன் அந்த தேயிலைத் தோட்டத்துக்குள் வந்திருந்த போலீஸ் குழுவைக் கண்ட அப்பகுதி உள்ளூர் வாசிகள் அவர்களைத் தாக்கி இரவோடு இரவாகச் சிறைபிடித்துவைத்தனர். அதன்பின்னர் அஸ்ஸாமிலுள்ள போலீஸார் இதுபற்றி அறிந்ததும், உடனே நாகாலாந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த நாகாலாந்து உள்ளூர் காவல்துறையினர், பிடித்துவைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் அதிகாரிகளை மீட்டுச் சென்றனர்.
குறிப்பாக இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், பிடித்துவைக்கப்பட்டிருந்த 16 போலீஸ் அதிகாரிகளில் மூன்று பேர் மட்டுமே சீருடையில் இருந்தனர். மற்ற அனைவரும் சிவில் உடையில் இருந்தனர். இதனால் குழப்பம் அடைந்த உள்ளூர் வாசிகள், போலீஸ் குழுவைத் தாக்கினர். இறுதியில் நாகாலாந்து போலீஸார் வந்து மீட்டனர். ஆனாலும் முதலில் 5 பேரை மட்டுமே விடுவித்த உள்ளூர் வாசிகள், மறுநாள் காலையில் மீதமிருந்த 11 பேரையும் அனுப்பி வைத்தனர் என்று அவர் கூறினார்.
photo credit: indiatoday


Click it and Unblock the Notifications