இதோ ஆரம்பிச்சிட்டாரு.. Counterpoint-ஐ கதறவிட்ட கைப்புள்ள.. iPhone 17 சீரீஸ் விலைகள் தாறுமாறா இருக்கும்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 16 அப்டேட் (iOS 26 Update) அறிமுகமாகி விட்டது. அடுத்தது என்ன ஐபோன் 17 சீரிஸின் (iPhone 17 Series) அறிமுகம் தான். இந்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களில் சில பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றங்கள் பெரிதாக இருந்தால், விலை நிர்ணயமும் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்!
ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸின் கீழ் "வழக்கம் போல" மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும். ஆனால் அவைகளில் ஒன்று முற்றிலும் புதிய மாடல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய "வழக்கமான" மாடல்களுடன், முற்றிலும் புதிய மாடல் ஆக ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் அதன் ஐபோன் சீரிஸில் உள்ள 'பிளஸ்' மாடலை (Plus models) படிப்படியாக அகற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு அணுகுமுறையில் ஒரு நுட்பமான மாற்றமாக இருக்கும். புதிதாக வரும் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது ஸ்லிம் ஆன, மிகவும் நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பை (Slim Design) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் புதிய அறிக்கை (Counterpoint Research Report), ஆப்பிள் அதன் வரவிருக்கும் ஐபோன் 17 சீரீஸிற்கான விலைகளை அதிகரிக்கக்கூடும் என்பதை குறிக்கிறது. சில ஆண்டுகளாகவே ஆப்பிள் அதன் விலை நிர்ணயத்தை ஒப்பீட்டளவில் சீராக வைத்திருந்தாலும், அமலுக்கு வருமென்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க கட்டணங்கள் (US Tariffs) ஆனது உற்பத்தி செலவுகளை உயர்த்தக்கூடும் என்பதால், ஐபோன் 17 சீரீஸ் விலைகளும் அதிகரிக்கக்கூடும்.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் ஆனது அமெரிக்க கட்டணங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளை காரணம் காட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வளர்ச்சி கணிப்பை, 4.2 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக திருத்தியுள்ளதாக கூறுகிறது.
கடந்த மாதம் நடந்த ஆப்பிளின் வருவாய் குறித்த அறிவிப்பில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் (Apple CEO Tim Cook), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய கட்டணங்கள், ஐபோன்களை உற்பத்தி செய்வதற்கான மொத்த செலவை கூடுதலாக $900 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என்று கூறிஇருந்தார்.
இது - ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகியவைகள் ஐபோன் 16 சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களை விட அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிக்கிறது. அதிக விலை நிர்ணயம் காரணமான வட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய சந்தைகளில் ஐபோன் 17 சீரீஸின் விற்பனை சரிவை காணக்கூடும் என்பதையும் கவுண்டர்பாயிண்ட் குறிப்பிட்டுள்ளது
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸை வருகிற செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொடர்ந்து தனது புதிய ஐபோன்களை வெளியிட்டு வருகிறது.
ஆக நமக்கு இன்னும் தெரிய வேண்டியதெல்லாம் சரியான வெளியீட்டு தேதி (iPhone 17 Launch Date) மட்டுமே ஆகும். ஐபோன் 16இ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐபோன் 17இ மாடல் ஆனது நிச்சயமாக ஐபோன் 17 சீரீஸ் உடன் சேர்த்து செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படாது. இது 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








