கூகுள் பே, போன்பே இருக்கா? இனி யுபிஐ-யில் இந்த முக்கியமான வசதி இருக்காது.. காரணம் இதுதான்..
கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த யுபிஐ (upi) செயலிகளில் ஒரு முக்கியமான ஆப்ஷன நிறுத்தப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 1 முதல்
இந்தியாவில் யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகை கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த யுபிஐ செயலிகள் மூலம் தொலைவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. எனவே தான் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் இந்த யுபிஐ செயலிகளில் அவ்வப்போது புதிய அப்டேட் மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் சேர்த்து வருகிறது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India). அந்த வகையில் யுபிஐ செயலிகளில் மிகவும் முக்கியமான வசதி ஒன்று வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நீக்கப்பட உள்ளது.
அதாவது வரும் அக்டோபர் 1-ம் தேதி யுபிஐ செயலிகளில் P2P என்ற பரிவர்த்தனைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி யுபிஐ பயனர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான வேண்டுகோளாக இருந்தது. அதாவது collect request எனும் ஆப்ஷன் தான் இனி பயன்படுத்த முடியாது. அதுவும் இந்த வசதி அதிகமாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடி செயல்கள் அதிகரிப்பதால் தான் இந்த நடவடிக்கை என்.பி.சி.ஐ எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக கலெக்ட் ரெக்யூஸ்ட் (collect request) வசதியை பெரும்பாலும் மோசடி கும்பலே அதிகளவில் பயன்படுத்துவதாகவும், பயனர்கள் பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை ஏற்றவுடன் தங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் சென்றுவிடும், பணம் எடுப்பதற்கான கோரிக்கை என்று அறியாமலே பலர் இதில் ஏமாந்துவிடுவதால் இந்த வசதி நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.2000 வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது மோசடியை அதிகளவில் கட்டுப்படுத்திய நிலையில், இத்தகைய மோசடிகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் என்.பி.சி.ஐ இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே இதன் மூலம் இனிமேல் பயனர்கள் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் கியூ ஆர் கோடு அல்லது தொடர்பு எண்களைப் பயன்படுத்தி மட்டுமே அனுப்ப முடியும். குறிப்பாக இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்த புதிய மாற்றங்கள் வணிக பரிவர்த்தனைகளைப் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஐஆர்சிடிசி, பிளிப்கார்ட் அமேசான், ஸ்விக்கி போன்ற தளங்கள் வழக்கம் போல கலெக்ட் ரெக்யூஸ்ட் கொடுத்து பண பரிவர்த்தனைகள் பயனர்களிடம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவற்றை அப்ரூவ் செய்ய பயனர்கள் யுபிஐ பின் நம்பரை கட்டாயம் பதிவிட வேண்டியிருக்கும். அதாவது ஆன்லைன் பேமெண்டின் போது வழக்கம் போல பரிவர்த்தனை செய்ய முடியும்.
மேலும் புதிய விதிமுறைகள் தொடர்பாக யுபிஐ சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் என்.பி.சி.ஐ கடிதம் எழுதியுள்ளது. குறிப்பாக யுபிஐ சேவையில் அவ்வப்போது வரும் பாதுகாப்பு அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேசமயம் யுபிஐ சேவையில் இன்னும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








