முடிவுக்கு வரும் இலவச UPI சேவை.. Google Pay, PhonePe பயன்படுத்த கட்டணம்.. RBI ஆளுநர் போட்டுடைத்த உண்மை!
ரூ.2000 க்கு மேல் யுபிஐ வழியாக பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று கிளம்பிய திடீர் புரளியே இன்னும் ஒய்ந்த பாடில்லை. இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் தெளிவாக விளக்கமளித்தும் கூட இன்னமும் சிலர் "ரூ.2000 யுபிஐ-க்கு ஜிஎஸ்டி-ஆ?" என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா (RBI Governor Sanjay Malhotra), யுபிஐ சேவை தொடர்பான இன்னொரு புதிய பீதியை கிளப்பி விட்டுள்ளார். அதென்ன பீதி? அப்படி அவர் என்ன கூறியுள்ளார்? யுபிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட் இன்டர்பேஸ் சேவையில் அப்படி என்ன மாற்றம் வரவுள்ளது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் "முற்றிலுமாக இலவசமாக கிடைக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சகாப்தம் முடிவுக்கு வரக்கூடும்" என்பதை சூசகமாக கூறியுள்ளார். அதாவது யுபிஐ சேவை ஆனது விரைவில் கட்டண சேவையாக மாறும், யுபிஐ வழியாக பணப்பரிமாற்றம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமானது (யுபிஐ) தொடர்ந்து புதிய உயரங்களை எட்டியுள்ள நிலையில், இந்த அமைப்பை நிதி ரீதியாக நிலையானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தினார். யுயிஐ சேவையானது தற்போது வரை எந்தவிதமான பயனர் கட்டணங்களும் இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த அமைப்பை இலவசமாக வைத்திருக்க அரசாங்கம் வங்கிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களுக்கு மானியம் வழங்கி வருவதாகவும் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் எளிமையாக அணுகக்கூடிய, பாதுகாப்பான டிஜிட்டல் பேமண்ட்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாடு உறுதியாக இருந்தாலும் கூட, நீண்டகால நிலைத்தன்மையை புறக்கணிக்க முடியாது என்று மல்ஹோத்ரா அடிக்கோடிட்டுக் காட்டினார். "செலவுகள் செலுத்தப்பட வேண்டும். யாராவது செலவை ஏற்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் யுபிஐ நெட்வொர்க் ஆனது ரூ.24.04 லட்சம் கோடி மதிப்புள்ள 18.4 பில்லியன் பரிவர்த்தனைகளை கண்டதாக என்பிசிஐ தரவுகள் தெரிவிக்கின்றன. போன்பே ஆப் (PhonePe App) தான் 8.55 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் முன்னணியில் உள்ளது. இதன் கீழ் நடந்த மொத்தபணப்பரிவர்த்தனை மதிப்பு ரூ.11.99 லட்சம் கோடி ஆகும். இது மொத்த யுபிஐ அளவில் 46.5% மற்றும் மதிப்பில் கிட்டத்தட்ட 50% ஆகும்.
மறுகையில் உள்ள கூகுள் பே ஆப் (Google Pay App) ஆனது 6.54 பில்லியன் பரிவர்த்தனைகளை சந்தித்துள்ளது. இதன் கீழ் நடந்த மொத்தபணப்பரிவர்த்தனை மதிப்பு ரூ.8.41 லட்சம் கோடி ஆகும். இது மொத்த யுபிஐ அளவில் 35.6.% ஆகும் மற்றும் மதிப்பில் கிட்டத்தட்ட 35% ஆகும். பேடிஎம் ஆப்பை (Paytm App) பொறுத்தவரை ரூ.1.34 லட்சம் கோடி மதிப்புள்ள 1.27 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிறுவனம் மொத்த யுபிஐ அளவில் 6.9% மற்றும் மதிப்பில் 5.6% கொண்டுள்ளது. வளர்ந்து வரும் நிறுவனங்களில், சூப்பர் மணி (super.money) ஆனது பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் கிரெட்டை (CRED) விட முன்னணியில் உள்ளது. புதிய தளங்களான நவி (Navi) மற்றும் பாம்ஆப் பை ட்ரியோ (FamApp by Trio) ஆகியவைகள் முறையே 406 மில்லியன் மற்றும் 113 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளன
இப்படியாக நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே போகும் யுபிஐ சேவையின் பரிவர்த்தனைகளை குறிப்பிட்டு தான், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா யுபிஐ சேவையானது தொடர்ந்து இலவசமாகவே கிடைக்காது என்பதை பற்றி பேசியுள்ளார். ஆனால் இதுகுறித்த, அதாவது எப்போது முதல் யுபிஐ யூசர் சார்ஜ் (UPI User Charges) அமலுக்கு வரும் என்பது பற்றி அவர் பேசவில்லை.
முன்னரே குறிப்பிட்டபடி. ரூ.2,000க்கு மேல் உள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஸ்டி வரி விதிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று மாநிலங்களவை உறுப்பினர் ஆன அனில் குமார் யாதவ் கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி, இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், அத்தகைய பரிந்துரை எதுவும் வரவில்லை, ரூ.2000 க்கு மேல் யுபிஐ பேமண்ட் செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற எந்த விதியும் அமலுக்கு வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








