UPI சேவையில் சாதனை.. 15,000 கோடி பரிவர்த்தனை! பார்த்து கத்துக்கோங்க.. உலக நாடுகளை வாய்பிளக்க வைக்கும் இந்தியா!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் இந்தியா ஒரு மகத்தான சாதனையை செய்து உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த நவம்பர் மாதம் வரையிலாக, ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான 15,547 கோடி பரிவர்த்தனைகள் (15,547 crore transactions of ₹223 lakh crore) ஆனது யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கையாளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் (Finance Ministry) தெரிவித்து உள்ளது.

எக்ஸ் (X) தள பதிவு வழியாக, இந்தியாவில் யுபிஐ வழியிலான நிதி பரிவர்த்தனைகள் ஆனது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. அதில் நிதி அமைச்சகம் ஆனது யுபிஐ-யின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது மற்றும் #FinMinYearReview2024 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல நாடுகளில் யுபிஐ-யின் அதிகரித்து வரும் பயன்பாட்டையும் குறிப்பிட்டுள்ளது.
யுபிஐ மற்றும் ரூபே ஆகிய இரண்டுமே இந்தியாவிற்கு வெளியே விரைவாக முன்னேறி வருவதால், இந்தியாவின் டிஜிட்டல் கட்டண புரட்சியானது உலகளவில் பரவி வருகிறது. தற்போது யுஏஇ, சிங்கப்பூர், பூடான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய ஏழு நாடுகளில் யுபிஐ சேவை அணுக கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம், கடந்த 2016 இல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஆனது வங்கி கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐயை அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் பணப்பரிவர்த்தனைகள் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எளிமையாக்கப்பட்டது
விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிமையான நிதிப் பரிவர்த்தனைகளை வழங்கியதன் மூலம் யுபிஐ சேவையானது இந்திய மக்கள், சிறு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின்படி, யுபிஐ பேமெண்ட்டின் அளவானது 45 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் 16.6 பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டியுள்ளது. இந்த அதிகரிப்பு மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 37 சதவீதம் உயர்ந்து ரூ.23.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது
மேலும் சராசரி தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 535 மில்லியனாகவும், சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.75,801 கோடியாகவும் மதிப்படிபட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பின்படி, ஏசிஐ உலகளாவிய அறிக்கை 2024 இன் படி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளாவிய நிகழ்நேர கட்டண பரிவர்த்தனைகளில் இந்தியா சுமார் 49 சதவீதத்தை கொண்டுள்ளது.
இதமன் விளைவாக யுபிஐ சேவையில் ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் அறிமுகங்கள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஆர்பிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ சேவை வழியாக கடன் கொடுக்கும் புதிய வசதிக்கு அனுமதி அளித்தது. இதன்கீழ் சிறு நிதி வங்கிகளுக்கு (Small Finance Banks - SFBs) யுபிஐ மூலம் முன் அனுமதி பெற்ற கடன்களை (Pre-sanctioned credit lines) வழங்க அனுமதி கிடைத்துள்ளது.
முன்னதாக யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், யுபிஐ லைட் வாலட் வரம்பு (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் யுபிஐ லைட் சேவையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் அறிமுகமானது. இதேபோல யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








