கூகுள் பே, போன்பே மூலம் பணம் அனுப்புறீங்களா? இனி இந்த புதிய ரூல்ஸ் வரலாம்! இதோ முழு விவரம்..
இந்தியா முழுவதும் யுபிஐ சேவையை அதிகம் மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகள் மூலம் தான் மக்கள் பணப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றனர். குறிப்பாக இந்த யுபிஐ சேவை மூலம் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது.
இந்நிலையில் இந்தியாவில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக, பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் வகையில் 'Yes/No' என்ற புதிய பாப்-அப் வசதியை அறிமுகப்படுத்துமாறு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்துள்ளன.

தற்போது UPI வழியாக பணம் அனுப்பும்போது, PIN எண்ணைப் பதிவு செய்தவுடன் பரிவர்த்தனை உடனடியாக நிறைவடைந்து விடுகிறது. ஆனால் வங்கிகள் முன்வைத்துள்ள புதிய முறையில், சந்தேகத்திற்குரியதாகவோ அல்லது அதிக ஆபத்து கொண்டதாகவோ கருதப்படும் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், பயனரின் செல்போன் திரையில் "இந்த நபருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியுடன் 'Yes/No' பாப்-அப் தோன்றும். அதில் பயனர் 'Yes' என்பதைத் தேர்வு செய்த பின்னரே பணப் பரிமாற்றம் நிறைவு செய்யப்படும். ஒருவேளை No என்பதைத் தேர்வு செய்தால் அது ரத்து செய்யப்படும்.
அதேசமயம் வழக்கமாக தினசரி மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான UPI பரிவர்த்தனைகள் மற்றும் காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் செய்யப்படும் சாதாரண பணப் பரிமாற்றங்களுக்கு இந்த எச்சரிக்கை பாப்-அப் தோன்றாது. இதனால், அன்றாட தேவைகளுக்கான பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் சிரமம் ஏற்படாது.
அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக தொகையை அனுப்புவது, புதிதாக அறிமுகமான ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்துவது, புதிய சாதனத்தில் இருந்து பரிவர்த்தனை மேற்கொள்வது அல்லது வழக்கத்திற்கு மாறான இடத்திலிருந்து பணப் பரிமாற்றம் செய்வது போன்ற சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே இந்த 'Yes/No' எச்சரிக்கை பாப்-அப் காட்டப்படும் என கூறப்படுகிறது.
அதுவும் போன் கால்கள் அல்லது போலியான வாடிக்கையாளர் சேவை எண்களை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி அவசரமாக பணம் அனுப்ப வைக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளுக்கு முன் திரையில் தோன்றும் இந்த சிறிய இடைநிறுத்தம், பயனர்கள் மீண்டும் ஒருமுறை சிந்தித்து மோசடி பரிவர்த்தனைகளைத் தவிர்க்க உதவும் என வங்கிகள் கருதுகின்றன.

இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கம், அவசரத்தில் தவறான நபரின் கணக்கிற்குப் பணம் அனுப்பும் சம்பவங்களைக் குறைப்பதுடன், சைபர் மோசடிகளில் இருந்து UPI பயனர்களை பாதுகாப்பதாகும். இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி அல்லது NPCI அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அமல்படுத்தும் வரை, தற்போதுள்ள UPI பரிவர்த்தனை முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, தற்போது பயனர்கள் வழக்கம்போலவே UPI மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications