UPI ஒன் வேர்ல்ட் சேவை அறிமுகம்.. இனி ஈசியாக பணம் அனுப்பலாம்.. பயன்படுத்துவது எப்படி? இதோ விவரம்..
இந்தியா முழுவதும் யுபிஐ சேவை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. குறிப்பாக இந்த சேவை மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இந்நிலையில் 'யுபிஐ ஒன் வேர்ல்ட்' (UPI One World) எனும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இனிமேல் ரொக்கப் பணம் இல்லாமலேயே, இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக பணம் செலுத்த முடியும். தற்போது இதற்காக யுபிஐ ஒன் வேர்ல்ட் (UPI One World) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது தேசிய இந்தியக் கொடுப்பனவு கழகம் (NPCI).

பிப்ரவரி 16 முதல் 20 வரை புது தில்லியில் நடைபெறும் இந்தியா ஏ.ஐ. இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்காக இந்த புதிய சேவை இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் வந்து தங்கியிருக்கும் போது, இந்திய வங்கி கணக்கோ அல்லது இந்திய மொபைல் எண்ணோ இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இந்த 'வாலட்' (Wallet) உதவுகிறது. அதுவும் வெளிநாட்டு பயணிகள் இந்திய ரூபாய்க்குப் பணத்தை மாற்றிக் கையில் வைத்திருப்பார்கள் அல்லது சர்வதேச கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் இனி அந்த பிரச்சனை இருக்காது. அதாவது இனி வெளிநாட்டுப் பயணிகள் ஒரு சாதாரண டீக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எங்கும் க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து நொடிப் பொழுதில் பணம் செலுத்த முடியும். சரி இதை எப்படி பயன்படுத்து என்பதை இப்போது பார்க்கலாம்.
1. முதலில் டிரான்ஸ்கார்ப் (Transcorp) நிறுவனத்தின் CheqUPI செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
2.அடுத்து உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
3. அதன்பின்னர் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களைப் பதிவேற்றவும்.
4. அடுத்து அந்த செயலியில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்கவும்.
5. இப்போது உங்களுக்கான பிரத்யேக யுபிஐ பின் நம்பரை உருவாக்கவும்.
6. அதன்பிறகு சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் உங்கள் வாலட்டில் பணத்தை ஏற்றவும்.
7. அவ்வளவு தான் நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வாலட்டில் ஒருமுறை அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே ஏற்ற முடியும். ஒரு மாதத்திற்கு மொத்தம் 50,000 ரூபாய் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயணம் முடிந்து தாயகம் திரும்பும் போது, வாலட்டில் மீதமுள்ள பணத்தை மீண்டும் தங்களின் பழைய கணக்கிற்கே மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்.பி.சி.ஐ-இன் வளர்ச்சிப் பிரிவு நிர்வாக இயக்குநர் சோகினி ரஜோலா தெரிவித்தது என்னவென்றால், யுபிஐ என்பது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பாகும். சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு இந்த சேவையை வழங்குவதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வழிவகை செய்கிறோம் என்று கூறினார்.
photo credits: techlusive


Click it and Unblock the Notifications








