யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. 2027 ஜனவரி வரை அவகாசமா? மத்திய அரசு ஆலோசனை..
இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகளைப் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் இந்த யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். எனவே தான் யுபிஐ செயலிகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் யுபிஐ பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பது குறித்து மத்திய குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

யுபிஐ சேவையைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.21 ஆயிரம் கோடி செலவாகிறது. இந்த செலவை யார் ஏற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் வியாபார பரிவர்த்தனைகளுக்கு, வணிகர்களிடம் 0.4 சதவீத கட்டணம் வசூலிக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த புதிய கட்டண முறை வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனமான என்.பி.சி.ஐ., அறிவித்துள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. கட்டணத்தை வணிகர்களே செலுத்த வேண்டும். ஆனால், இந்த செலவை வாடிக்கையாளர்களிடமே வணிகர்கள் வசூலிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பண்டிகை காலமும் தொடங்கியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை தசரா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளன. இதைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளும் வருகின்றன. இதனால், பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும் என வணிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது நாட்டில் 50 கோடிக்கும் அதிகமானோர் யு.பி.ஐ., சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய யு.பி.ஐ., கட்டண முறை அமலுக்கு வந்தால், பண்டிகை கால விற்பனை பாதிக்கப்படலாம் எனப் பலரும் கருதுகின்றனர். இதனால், எம்.டி.ஆர்., எனப்படும் இந்தக் கட்டண முறையை சில மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
புதிய கட்டண முறையை ஏற்றுக்கொள்ள வணிகர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இந்த நடைமுறையை சில மாதங்கள் தள்ளிவைப்பது வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 15ம் தேதி அமலுக்கு வருவதற்குப் பதிலாக, 2027 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படலாம் என, இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாற்றம் வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது. அதுவும் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்பதால், புதிய கட்டண முறையை அமல்படுத்துவதில் கூடுதல் அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிகர்கள் புதிய நடைமுறைக்கு தயாராகவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து எளிதாக நடைபெறவும் வாய்ப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications
