மாதம் ரூ.40,000.. 40 பண பரிமாற்றங்கள்.. UPI சேவையில் இப்படி ஒரு வசதியா.. இதை இவ்ளோ பேர் யூஸ் பண்றாங்களா?
கிவி (Kiwi) என்கிற கிரெடிட்-ஆன்-யுபிஐ தளத்தின் சமீபத்திய அறிக்கையின் வழியாக பகிரப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும் போது.. உங்களில் சிலர் "என்னது யுபிஐ சேவையில் இப்படி ஒரு வசதி இருக்கிறதா?" இதை இவ்வளவு பேர் பயன்படுத்துகிறீர்களா?" என்று ஷாக் ஆகலாம். இதை ஏற்கனவே பயன்படுத்துபவர்கள் "என்னது மாதம் ரூ.40,000-ஆ!" என்று ஷாக் ஆகலாம்!
அதென்ன வசதி? நாம் இங்கே பேசுவது யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு (UPI-enabled credit card) வசதியை பற்றித்தான். யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் பாரம்பரிய (அதாவது வழக்கமான) கிரெடிட் கார்டு பயன்பாடு இரண்டையும் ஒப்பிடும் புள்ளிவிவரங்களை தான் கிவி வெளியிட்டுள்ளது.

கிவியின் சமீபத்திய அறிக்கையின்படி யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு (UPI-enabled credit card) பயனர்கள் சராசரியாக மாதத்திற்கு 40 பரிவர்த்தனைகளை செய்கிறாரக்ள். இது பாரம்பரிய கிரெடிட் கார்டு பயனர்களை விட 8 மடங்கு அதிகமாகும். 20% மாதாந்திர வளர்ச்சி மற்றும் 5% செலவின அதிகரிப்புடன், யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு பயனர்களின் சராசரி மாதச் செலவு இப்போது ஒரு பயனருக்கு ரூ 40,000-ஐ எட்டியுள்ளதாகவும் கிவியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் இந்த அறிக்கை யுபிஐ கிரெடிட் கார்டுகளுக்கான சராசரி பரிவர்த்தனை அளவு ரூ.1,125 ஆகும் என்றும், இது பாரம்பரிய கிரெடிட் கார்டுகளுக்கான சராசரியான ரூ.4,000 விட மிகவும் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாகவே, பலரும் யுபிஐ கிரெடிட் கார்டு வசதியை தினசரி வாங்குதலுக்கான சிறந்த கட்டண விருப்பமாகதேர்வு செய்கின்றனர்.
இந்த மாற்றத்தால் சிறு வணிகர்கள் பெரிதும் பயனடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் யுபிஐ கிரெடிட் கார்டுகளின் 75% பரிவர்த்தனைகள் மளிகைக் கடைகள் மற்றும் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற சிறிய கடைகளில் நிகழ்கின்றன. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் வளர்ந்து வரும் போக்குகளை பகுப்பாய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் உருவான கிவியின் இந்த அறிக்கை, கிரெட்டி பிஹேவியரில் யுபிஐ ஒருங்கிணைப்பின் தாக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
பெங்களூருக்கு முதலிடம்: மெட்ரோ நகரங்களில், யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன. கிவி அறிக்கையின்படி, பெருநகரங்கள் அல்லாதவற்றில், யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு தத்தெடுப்பில் புனே முதலிடத்தில் உள்ளது, அதை தொடர்ந்து அகமதாபாத், ஜெய்ப்பூர், இந்தூர், சண்டிகர் ஆகிய நகரங்கள் உள்ளன.
கிவியின் அறிக்கை, இளைஞர்கள் தான் யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டு பயனர்களில் சுமார் 45% பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். அதை தொடர்ந்து 30% பேர் 31-40 வயதுடையவர்களாக உள்ளனர். 20% பேர் 41-50 வயதுடையவர்களாக உள்ளனர்.
ரூபே கிரெடிட் கார்டுகளுக்கான சந்தைப்பங்கு 2023 ஆம் ஆண்டில் 3% இலிருந்து 2024 ஆம் ஆண்டில் 12% ஆக அதிகரித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு - நாளுக்கு நாள் பிரபலமடைந்து வரும் யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டுகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது, கடந்த ஜூன் 2022 இல் என்பிசிஐ-யின் ரூபே கிரெடிட் கார்டுகளுடன் யுபிஐ-ஐ ஒருங்கிணைக்க அனுமதித்தது.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து கிவி இணை நிறுவனர் மோஹித் பேடி கூறுகையில், யுபிஐ எனேபிள்டு கிரெடிட் கார்டுகள் மில்லியன் கணக்கான இந்தியர்கள், தங்களுடைய கடனுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை மட்டும் மாற்றவில்லை, அவைகள் முழு கட்டண சூழலையும் மாற்றியமைக்கின்றன. யுபிஐ-யின் வசதி மற்றும் பரவலான ஏற்றுக்கொள்ளல்லின் வழியாகவே இது சாத்தியமாகி உள்ளது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








