473.. இந்த நம்பரை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க.. Aadhaar சேவையில் மிகப்பெரிய மாற்றம்.. UIDAI அதிரடி!
473 என்கிற எண்ணை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, இந்தியா முழுவதும் ஆதார் சேவைகளில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவதற்காக அறிவித்துள்ள ஒரு எண் ஆகும்.
என்ன வாக்குறுதி? நாடு முழுவதும் ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களை விரிவுபடுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 88 முழுமையான ஆதார் மையங்களே ( Full Fledged Aadhaar Centres) உள்ளன. இந்த எண்ணிக்கை, செப்டம்பர் 2026 க்குள் 473 ஆக உயரும் என்று யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, குறிப்பாக கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதார் தொடர்பான சேவைகளை மிகவும் நெருக்கமாக கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இளம் குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கை தபால் நிலையங்களில் கிடைக்கிறது, ஆனால் பெரியவர்கள் பெரும்பாலும் புதிய சேர்க்கைகள் அல்லது புதுப்பிப்புகளுக்காக ஆதார் மையங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாக இருக்கிறது; இது சிரமமான காரியமும் கூட!
குறைந்த வசதிகள் காரணமாக ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்காக பலரும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிய மையங்கள் இந்த சுமையைக் குறைக்கவும், ஆதார் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றவும், தேவையற்ற பயணங்களை குறைக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகவரி புதுப்பிப்புகள் போன்ற சில ஆதார் விவரங்களை வீட்டிலிருந்தே ஆன்லைனில் செய்ய முடியும். இருப்பினும், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். பெயர் அல்லது புகைப்படத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரில் வந்து செய்யும் சரிபார்ப்பு தேவை.
இதுபோன்ற அனைத்து சேவைகளும் வரவிருக்கும் 473 மையங்களில் கிடைக்கும். பெரும்பாலான இந்தியர்களிடம் ஏற்கனவே ஆதார் இருந்தாலும், நாட்டின் அதிக மக்கள் தொகை காரணமாக, ஆதார் இல்லாத மக்கள் இன்னும் லட்சக்கணக்கில் உள்ளனர். இதேபோல என்ஆர்ஐ-களும் (NRI), வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கும் போது பெரும்பாலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதை இன்னும் எளிமைப்படுத்த அருகிலுள்ள ஆதார் மையங்களை மக்கள் எளிதாக கண்டறிய உதவும் வகையில், யுஐடிஏஐ ஆனது கூகுள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் மூலம் கூகுள் மேப்ஸ்-ல் ஆதார் மைய இருப்பிடங்களை இன்னும் எளிதாக பார்க்க முடியும். சட்டவிரோத குடியேற்றம் குறித்த கடுமையான சோதனைகளுக்கு மத்தியில், புதிய விண்ணப்பதாரர்களுக்கான ஆதார் சேர்க்கையில் இப்போது கள அளவிலான சரிபார்ப்பும் நடக்கிறது
இதன் கீழ் ஆதார் கார்டு வழங்குவதற்கு முன்பு விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிக்கிறாரா என்பதை மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்வார்கள். இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரும் கூட ஆதார் அடையாளத்தை பெற முடியும் என்றாலும், அது குடியுரிமைக்கான சான்றாக செயல்படாது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் தரவு சார்ந்த துல்லியத்தை மேம்படுத்துவதற்காக பிறந்த தேதியில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான விதிகளையும் யுஐடிஏஐ கடுமையாக்கியுள்ளது. ஒரு நபர் சட்டப்பூர்வமாக இரண்டு வெவ்வேறு பிறந்த தேதிகளை கொண்டிருக்க முடியாது என்பதால், திருத்தங்கள் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதுதொடர்பான மாற்றங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
எனவே குழந்தைகளுக்கான ஆதார் சேர்க்கையின் போது குழந்தைகளுக்கான விவரங்களை வழங்கும்போது பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பிறந்த தேதி பற்றிய தவறான தகவல்களை வழங்குவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற ஒரு வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பெற்றோர்கள் தவறான விவரங்களை சமர்ப்பித்ததின் விளைவாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்துவதற்கான மற்றொரு படியாக ஆதார் சேவைகளின் இந்த விரிவாக்கம் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2026 க்குள் அதிக மையங்கள் வருவதால், உண்மையான பயனாளிகள் விரைவான சேவைகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தவறான பயன்பாடும் தடுக்கப்படும். ஆதார் இன்று ஒரு அடையாள அட்டையை விட அதிகமாக செயல்படுகிறது. இது அரசாங்க திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








