புது App வந்ததும் ஆரம்பிச்சிட்டாங்க.. புது ஆதார் Update ரூல்ஸ்-க்கு UIDAI அனுமதி.. இனிமேல்?
பழைய எம்ஆதார் ஆப்பின் (mAadhaar App) கதை அதிகாரபூர்வமாக முடிந்து விட்டது. ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) தான் யுஐடிஏஐ-யின் ஆதார் சேவைகளை வழங்கும் அதிகாரப்பூர்வ ஆப் ஆகும். இதுகுறித்த பல அறிவிப்புகள் வெளியாகி இருந்தது, அதன் விளைவாக சுமார் 31 மில்லியனுக்கும் அதிகமானோர் புதிய ஆதார் ஆப்பிற்கு மாறியும் உள்ளனர்.
புது ஆதார் அப்டேட் ரூல்ஸ்-க்கு அனுமதி: பல எண்ணிக்கையிலான இந்திய மக்களிடம் புதிய ஆப் புழக்கத்திற்கு வந்ததை தெடர்ந்து, ஆதார் அட்டை பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய ஆதார் ஆப்பை பயன்படுத்தி தனிநபர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை நேரடியாக சேர்க்கவோ அல்லது புதுப்பிக்கவோ இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) அனுமதி அளித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics & IT) தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க (Email Address Update) இந்திய குடியிருப்பாளர்கள் இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. இந்தச் சேவை 2026 ஜூலை 1 முதல் அடுத்த ஆறு மாத காலத்திற்கு (2026 டிசம்பர் மாத இறுதிவரை) அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
"இது ஆதார் ஆப் மூலம் வழங்கப்படும் ஒரு இலவச சேவையாகும்; 2026 ஜூலை 1 முதல் ஆறு மாத காலத்திற்கு இது செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது முன்னெப்போதையும் விட எளிதாகிறது," என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
ஆதார் ஆப்பில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களிலேயே, 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தளத்தை பயன்படுத்தி தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை புதுப்பித்துள்ளதாகவும் வெளியான அறிவிப்பு கூறுகிறது. மேலும், இந்த புதிய ஆதார் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் (Apple iOS) ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கிறது.
மேலும், ஆதார் உடன் மின்னஞ்சலை இணைப்பதன் மூலம், ஆதார் அங்கீகார கோரிக்கை மேற்கொள்ளப்படும் போதெல்லாம் பயனர்கள் நிகழ்நேர மின்னஞ்சல் அறிவிப்புகளை பெற முடியும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்தது. மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் ஆப் - மொபைல் எண் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்தே நேரடியாக பெறவும் உதவுகிறது.
இதுவரை, 40 மில்லியனுக்கும் (4 கோடி) அதிகமானோர் ஆதார் ஆப்பை பயன்படுத்தி தங்கள் மொபைல் எண்களை புதுப்பித்து (Mobile Number Update) உள்ளனர்; அதேவேளையில், சுமார் ஒரு மில்லியன் பயனர்கள் தங்கள் முகவரி விவரங்களை புதுப்பிக்க (Address Update) இத்தளத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன.
ஆதாரில் மின்னஞ்சல் முகவரிகளை சேர்க்கவும் புதுப்பிக்கவும் உள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியிருப்பாளர்களை யுஐடிஏஐ ஊக்குவித்துள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல் டிவைஸ்களில் ஆதார் ஆப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலமோ அல்லது புதுப்பிப்பதன் மூலமோ இந்த வசதியை பெறலாம்.
"ஆதாரில் மின்னஞ்சல் முகவரிகளை சேர்க்கவும் புதுப்பிக்கவும் உள்ள இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு யுஐடிஏஐ ஊக்குவிக்கிறது. குடியிருப்பாளர்கள் ஆதார் ஆப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலமோ அல்லது புதுப்பிப்பதன் மூலமோ மின்னஞ்சல் புதுப்பிப்பு வசதியை அணுகலாம்" என்று வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications