குழந்தைகளுக்கான Aadhar Card.. பெற்றோருக்கு UIDAI முக்கிய அறிவிப்பு.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளையும் பெறுவதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த ஆதார் (Aadhaar) கார்டை முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர நம்முடைய வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு, எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆதார் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்குப் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. குறிப்பாக இதனைத் தொடர்ந்து ஐந்து வயதை தாண்டும் போது ஆதாருடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக ஐந்து முதல் ஏழு வயதுடைய குழந்தைகளை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையங்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக இணைத்துக் கொள்ளலாம். பின்பு 7 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்திப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் தற்போது உள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் போது, கைரேகைகள், கருவிழி, புகைப்படம் ஆகியவை அவரது ஆதாரில் கட்டாயமாப் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுதான் முதலாவது கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் ஐந்து வயது முதல் ஏழு வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தையின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால் ஏழு வயதுக்கு பிறகு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 100 ரூபாய் மட்டுமே ஆகும்.
தற்போது குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவின் துல்லியம் நம்பத்தன்மையைப் பராமரிக்கக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை சரியான நேரத்தில் செய்வது அவசியமான தேவையாகும். அதுவும் 7 வயதுககுப் பிறகும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி, ஆதார் எண் செயலிழக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதார் அப்டேட் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் மற்றும் நோக்கில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சில நடவடிக்கை எடுத்தது. இதற்காக திருத்தப்பட்ட மற்றும் தெளிவான ஆவணங்களின் பட்டியலை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது புதிய விதிமுறையின் கீழ் ஆதார் கார்டு உருவாக்க அல்லது ஆதால் கார்டில் ஏதேனும் மாற்றங்களை செய்ய எந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம், தண்ணீர் அல்லது எரிவாயு பில்கள் போன்ற ஆவணங்கள் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர பிறப்புச் சான்றிதழும் செல்லுபடியாகும் ஆவணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்த இந்திய மற்றும் வெளிநாடு வாழ் இந்திய (NRI) குழந்தைகளுக்கு ஆதார் கார்டு உருவாக்கும் போது பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக ஆதார் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்திற்குப் பிறகு பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் குழந்தைகளின் ஆதார் சேர்க்கை நடைபெறாது.

மேலும் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினத்தை மாற்ற விரும்பினால் அதற்காக பரிந்துரைக்கப்பட்ட செல்லுபடியாகும் ஆவணங்களை நீங்கள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
அதேசமயம் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்கள் வழங்கப்பட்டிருந்தால் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட முதல் ஆதார் எண் மட்டுமே செல்லுபடியாகும். மற்ற அனைத்து ஆதார் எண்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும். மேலும் ஆதார் எண்களில் ஏதேனும் பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாவிட்டாலும், முதலில் வழங்கப்பட்ட ஆதார் எண் செல்லுபடியாகும் என்று கருதப்படும்.


Click it and Unblock the Notifications








