Twitter நிறுவனத்தில் Elon Musk செய்த ரகசிய வேலை.. உண்மையை அம்பலப்படுத்திய நீதிமன்றம்!
"என்ன தல.. இதுக்கு தான் கோடி கோடியா பணம் கொட்டி.. அவ்ளோ பஞ்சாயத்து பண்ணி.. ட்விட்டர் இன்க் (Twitter Inc) கம்பெனிய வாங்குனீயா?" என்று கேட்கும்படியாக.. ஒரு 'சைலன்ட்' ஆன சம்பவத்தை செய்துள்ளார் உலக பணக்காரர்களில் ஒருவரனான எலான் மஸ்க் (Elon Musk)!
ட்விட்டர் இன்க் நிறுவனமானது எக்ஸ் கார்ப் (X Corp) எனப்படும் நிறுவனத்துடன் 'மெர்ஜ்' ஆன பிறகு (அதாவது இணைக்கப்பட்ட பிறகு) அது ஒரு சுயாதீனமான நிறுவனமாக (Independent company) இல்லை. அதாவது ட்விட்டர் என்கிற ஒரு நிறுவனமே இப்போது இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2023 ஏப்ரல் 4 ஆம் தேதி கலிபோர்னியா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நீதிமன்ற ஆவணமானது "ட்விட்டர் நிறுவனம் இல்லை" (Twitter no longer exists) என்று பரிந்துரைக்கிறது. அதாவது ட்விட்டர் இன்க் என்கிற நிறுவனம் இனி சட்டப்பூர்வமாக இல்லை. ஏனென்றால் கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் எக்ஸ் கார்ப் அதை தன்வசப்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட நீதிமன்ற ஆவணமானது "ட்விட்டர் இன்க் நிறுவனமானது எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே ட்விட்டர் இன்க் இனி இல்லை. எக்ஸ் கார்ப் என்பது ஒரு தனியார் நிறுவனமாகும், அது அதன் முக்கிய வணிக தளமான கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது" என்று பரிந்துரைக்கிறது.
அடுத்தது என்ன? எலான் மஸ்க்கால் கையகப்படுத்தப்பட்டு, பெரிய அளவிலான மாற்றங்களையும், பல வகையான பணிநீக்கங்களையும், எண்ணில் அடங்காத நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் சந்தித்த பிறகே ட்விட்டர் நிறுவனம் பற்றிய இந்த உண்மை வெளியே வந்துள்ளது. மேலும் இந்த உண்மை மஸ்க்கின் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றிய சில தடயங்களையும் வழங்குகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது எக்ஸ் (X) என்கிற ஒரு பெரிய திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறிய பகுதியாகும் என்று எலான் மஸ்க் கடந்த காலங்களிலேயே கூறியுள்ளார். அதை 'எவ்ரிதிங் ஆப்' (Everything App) என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதற்கான வேலைகள் ஏற்கனவே நடக்க தொடங்கி விட்டது என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.
இன்று நேற்றல்ல, சீனாவின் வீசாட்-ஐ (WeChat) போலவே எக்ஸ் என்கிற ஒரு ஆப்பை உருவாக்க வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்ட கால விருப்பங்களில் ஒன்றாகும். அறியாதோர்களுக்கு வீசாட் என்பது டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Tencent Holdings Limited) நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு 'சூப்பர் ஆப்' ஆகும்.
வீசாட் ஆப் ஆனது வெறுமனே மெசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள உதவும் ஒரு தளமாக மட்டுமின்றி வழியாக பணம் செலுத்துதல் மற்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது என கிட்டத்தட்ட அனைத்திற்குமான ஒரு ஆப் ஆக செயல்படுகிறது. எலான் மஸ்க் எதற்கு அடி போடுகிறார் என்று - இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்!
எலான் மஸ்க்கிடம் எக்ஸ்.காம் (X.com) என்கிற டொமைனும் சொந்தமாக உள்ளது. இது அவர் தொடங்கிய ஆன்லைன் பேமெண்ட் (Online Payment) நிறுவனத்தின் பெயராகும், இறுதியில் அது பேபால் (PayPal) உடன் இணைக்கப்பட்டது. இப்போது ட்விட்டர் இன்க் நிறுவனமானது சத்தமின்றி எக்ஸ் கார்ப் உடன் இணைக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications