சிங்கம் மாதிரி இருந்த மனுஷன்.. எலான் மஸ்க்குக்கு ப்ளூ டிக் பயனர்கள் கொடுத்த பதிலடி.. கதிகலங்கிய Twitter
ட்விட்டரில் (Twitter) எலான் மஸ்க் (Elon Musk) செய்து வரும் அதிரடி மாற்றங்கள் காரணமாக அதன் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இப்போது, ப்ளூ டிக் சப்ஸ்கிரைபர்கள் (Blue Tick Subscribers) மத்தியிலும் ட்விட்டர் நிறுவனம் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்பாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. அப்போது, எலான் மஸ்க், தனது ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். அவரது கோடிக்கணக்கான ஃபாலோயர்கள், அவரின் ஒவ்வொரு ட்வீட்டையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

அப்போது, எலான் மஸ்க் பிரபலங்களை கிண்டல் செய்வது, போர் குறித்து விமர்சனம் செய்வது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களையும் பதிவிட்டார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ட்விட்டர் நிறுவனம் அவரது சில ட்வீட்களை நீக்கியது. இதனால், அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், ட்விட்டரில் கருத்து சுதந்திரத்துக்கு இடமில்லை என்று தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் போலவே ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க திட்டமிட்டார். இதனிடையே அவரது ஃபாலோயர்கள் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கப்போகிறார் என்று ட்வீட் பதிவிட்டு ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த நேரத்திலேயே ட்விட்டர் நிறுவத்தின் 5 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார்.
இறுதியில் 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து மொத்தமாக வாங்கினார். அதன்பின் தேவையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, சந்தா கட்டணங்களை உயர்த்துவது உள்ளிட்ட அதிரடி முடிவுகளை எடுத்தார். இறுப்பினும், ட்விட்டர் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கவில்லை.
அதன்பின் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கிற்கு மாதாந்திர கட்டணத்தை உயர்த்தினார். இதைப்போலவே கோல்டன், கிரே போன்ற கலர்களில் வெரிஃபைட் டிக் அம்சங்களை கொண்டுவந்தார். இதைக்கூட யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்கள் மாதாந்திர சந்தா கட்டாவில்லை என்று கூறி அவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல பிரபலங்கள் உங்களது ப்ளூ டிக்கே எங்களுக்கு தேவையில்லை என்று ட்விட்டரில் கருத்து பதிவிட தொடங்கிவிட்டனர். அதேபோல, ஏற்கனவே மாதாந்திர சந்தா கட்டிவந்த பயனர்களும் பணம் கட்டுவதை திடீரென நிறுத்தினர். இதனால் ட்விட்டருக்கு மிகப்பெரும் அடையாளமாக விளங்கி வந்த ப்ளூ டிக் பயனர்களின் எண்ணிக்கை சரிந்துவந்தது.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியபோது இருந்த 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்களில் இப்போது 68,157 பேர் மட்டுமே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் தங்களது சந்தாவை ரத்து செய்துள்ளனர். மாதாந்திர சந்தா வழங்கும் பயனர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ட்விட்டர் நிறுவனம் தர மறுத்துவிட்டது என கருத்து அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நஷ்டத்தில் போகும் ட்விட்டர் நிறுவனத்துக்கு இது மிகப்பெரும் அடியாக விழுந்துள்ளது. இதில் இருந்து மீள எலான் மஸ்க் என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜய்சேதுபதி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








