TRAI சொன்ன எச்சரிக்கை.. மொபைல் மற்றும் SIM கார்டு இருக்கா? உடனே கவனியுங்க.. உஷாரா இல்லாட்டி சிக்கல்..
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI) இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மொபைல் மற்றும் சிம் கார்டு வைத்துள்ள பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. டிராய் போல பாவித்து ஒரு கும்பல் மக்களிடம் KYC அப்டேட் மற்றும் சிம் கார்டு முடக்கம் என்ற பெயரில் மோசடி செய்து ஏமாற்றி வருகிறது. இது குறித்த எச்சரிக்கை செய்தியை தற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது என்பது இங்கே.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI) சமீபத்தில் நாட்டின் மொபைல் போன் பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும், மொபைல் அழைப்புகள் மூலமாகவும் மக்களை ஏமாற்றும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. தற்போது புது வகையான மோசடியால் மக்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதை தெளிவுபடுத்தும் விதமாக TRAI புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

TRAI சொன்ன எச்சரிக்கை.. மொபைல் மற்றும் SIM கார்டு இருக்கா?
புதிதாக பரவும் மோசடியில் அழைப்புகள் மூலம், மொபைல் பயனர்களின் KYC அப்டேட் பற்றியும் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சிம் இணைப்பை துண்டிக்க போவதாகவும் கூறி மோசடி செய்பவர்கள் மக்களின் தகவலை திருடி, பணத்தையும் திருட பார்க்கிறார்கள். உங்களை அழைப்பு மூலம் தொடர்புகொள்ளும் நபர் தன்னை ஒரு டிராய் அதிகரிபோல பாவித்து, உங்களை ஏமாற்ற பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
TRAI இந்த விவகாரம் குறித்து தற்போது அதனுடைய அதிகாரப்பூர்வ X தளத்தின் மூலம் புதிய எச்சரிக்கை செய்திகளை பரப்பி வருகிறது. TRAI இத்தகைய நடைமுறைகளில் ஈடுபடுவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், உங்கள் சிம் கார்டை செயல் இழக்க செய்வதற்கான அதிகாரம் TRAI இடம் இல்லை என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று TRAI தெரிவித்துள்ளது.
உடனே கவனியுங்க.. உஷாரா இல்லாட்டி சிக்கல் மக்களே:
மொபைல் சேவைகளை செயலிழக்கச் செய்யும் அதிகார வரம்பு உங்கள் சிம் கார்டுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரிடம் மட்டுமே உள்ளது என்பதையும் TRAI தெரிவித்துள்ளது. அதிகாரிகள் என்று நடிக்கும் மோசடி செய்பவர்கள், தேவையான KYC அப்டேட் அல்லது சிம் கார்டு இணைப்பு துண்டிப்பு போன்ற குற்றச்சாட்டுகளின் மூலம் வாடிக்கையாளர்களை சுரண்ட முயற்சித்த சம்பவங்கள் அதிகரித்து வருவதால் TRAI இந்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியில், TRAI நுகர்வோர் தங்களைத் தற்காத்துக் கொள்ள சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. KYC விவரங்களை புதுப்பிப்பதாகவோ அல்லது சிம் கார்டை செயல் இழக்க செய்வதற்காகவோ உங்களை யாரும் மிரட்டல் விடுத்தால், மக்கள் உடனே அச்சம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் ஏமாற்றப்படப்போகிறீர்கள் என்பதை அறிந்து அழைப்பை துண்டிப்பது பாதுகாப்பானது.
எந்த உண்மையான நிறுவனமும் தனிப்பட்ட தகவல் கேட்டு அத்தகைய அழைப்புகளை மேற்கொள்ளாது TRAI தெளிவாக தெரிவித்துள்ளது. அத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நபர்கள் பெறும் பட்சத்தில், 1930 என்ற தேசிய சைபர் பாதுகாப்பு உதவி மைய எண்ணை அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் படி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அழைப்பு மூலம் தொடர்புகொள்ள இயலவில்லை என்றால், தொலைத்தொடர்புத் துறையால் நிர்வகிக்கப்படும் சஞ்சார் ஸாதி மொபைல் ஆப்ஸ் அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் மக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகளை நீங்களோ அல்லது உங்கள் வட்டத்தில் உள்ள யாரேனும் பெற்றிருந்தால், அவர்களை பீதியடைமல் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வலியுறுத்துங்கள்.


Click it and Unblock the Notifications